பகீர்...10 டன் எடை கொண்ட செல்போன் டவர் மாயம்... போலீஸார் அதிர்ச்சி!

By காமதேனு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 10 டன் எடை கொண்ட செல்போன் டவர் திருடுபோனதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குற்றம்

உத்தரப் பிரதேச மாநிலம், கெளசாம்பி மாவட்டம், உஜ்ஜைனி கிராமத்தில் 10 டன் எடை கொண்ட செல்போன் டவர் திருடுபோனதாக டெக்னீஷியன் ராஜேஷ்குமார் யாதவ் என்பவர், சந்தீபன்காட் காவல் நிலையத்தில் கடந்த நவ.29-ம் தேதி புகார் அளித்துள்ளார்.

அதில், அந்த டவரானது கடந்த மார்ச் மாதமே திருடு போய்விட்டதாக குறிப்பிட்டுள்ளார். 50 மீட்டர் உயர, 10 டன் எடை கொண்ட இந்த டவர் மதிப்பு ரூ.8.50 லட்சத்துக்கும் கூடுதலாகும் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஐபிசி பிரிவு 379-ன்படி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த திருட்டுச் சம்பவத்தில் செல்போன் டவர் மட்டுமின்றி, மேற்கூரைகள், மின் சாதனங்கள், இதர பொருட்களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலீஸார் விசாரணை (கோப்பு படம்).

இந்த புகாரான போலீஸாருக்கு பெரும் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சந்தீபன்காட் காவல் நிலைய போலீஸார் நேற்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு செல்போன் டவர் அமைக்கப்பட்ட இடத்தின் உரிமையாளர், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து டெக்னீஷியன் ராஜேஷ்குமார் யாதவ் கூறுகையில், 'எங்களது நிறுவனம் இந்த மொபைல் டவரை கடந்த ஜனவரி மாதம் தான் நிறுவியது. கடந்த மார்ச் 31-ம் தேதி ஆய்வுக்காக சென்றபோது, மொத்த டவர், அதனுடன் கூடிய மின்சாதனங்கள் என அனைத்தையும் காணவில்லை' என்றார். செல்போன் டவர் காணாமல்போன விவகாரம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE