சென்னை: சென்னை - புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை. இன்று (புதன்கிழமை) அதிகாலை வியாசர்பாடி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
வியாசர்பாடி பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி, போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அதில் கஞ்சா இருந்துள்ளது. இதையடுத்து வாகனத்தை நிறுத்தாமல் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி, போலீஸாரை தட்டி விட்டு சென்றுள்ளார். போலீஸார் பின்தொடர்ந்து சென்றனர். அவரது வாகனம் பழுதாகி நின்றுள்ளது.
தொடர்ந்து அங்கிருந்து தப்பிக்க முயன்ற அவர், அந்த பகுதியில் மறைந்து கொண்டு போலீஸாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காப்பு நோக்கில் போலீஸார் பதில் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதில் குண்டு பாய்ந்து ரவுடி காக்கா தோப்பு பாலாஜி உயிரிழந்தார். இந்த சம்பவம் வியாசர்பாடி அருகே உள்ள குடியிருப்பு பகுதியான பிஎன்டி குவார்டர்ஸ் அருகே நடந்துள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
» போதை பொருள்கள் நடமாட்டம் உள்ளதா? - பெரும்பாக்கம் குடியிருப்பில் போலீஸார் சோதனை
» திமுக சாயலில் இன்னொரு கட்சி தேவையில்லை: தமிழக வெற்றிக் கழகம் குறித்து தமிழிசை கருத்து
கொலை, மிரட்டல், கட்டப் பஞ்சாயத்து என சுமார் 50 வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு சென்னையில் பல ரவுடிகளுடன் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையின் முக்கிய ரவுடியாக இவர் வலம் வந்துள்ளார். இவரிடம் கள்ளத்துப்பாக்கி இருந்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இவரை கைது செய்ய தமிழக காவல் துறை தனிப்படையும் அமைத்திருந்தது.