பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தொழிலதிபர் கடத்தல் வழக்கில் 2 குற்றவாளிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் தாக்கியதில் காயமடைந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பஞ்சாப் மாநிலம், லூதியானா லட்டு காலனி பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் சாம்பவ் ஜெயின் என்ற டெக்ஸ்டைல்ஸ் நிறுவன தொழிலதிபரை 7 பேர் கொண்ட கும்பல் கடத்தியது. பின்னர் அவரது குடும்பத்தினருக்குப் போன் செய்து பணம் கேட்டு மிரட்டியது.
ஆனால், கடத்தல் கும்பலுக்கு அஞ்சாத தொழிலதிபர் குடும்பத்தினர் இந்த சம்பவம் குறித்து பாஸ்தி ஜோதிவால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸ் தங்களை நெருங்கி விட்டதை உணர்ந்த கடத்தல் கும்பல், சாம்பவ் ஜெயினை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓரிடத்தில் காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு, அவரது காருடன் தப்பிச்சென்றது. பின்னர் சாம்பவ் ஜெயின் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 5 பேரை மட்டும் போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர். இக்கும்பலைச் சேர்ந்த இருவர் தப்பிவிட்டனர். அவர்களை போலீஸார் தேடி வந்த நிலையில் தற்போது என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக லூதியானா போலீஸ் கமிஷனர் குல்தீப் சிங் சாஹல் கூறுகையில், தொழிலதிபர் கடத்தல் வழக்கில் 7 பேருக்கு தொடர்பு உள்ளது. அவர்களில் ஜடின், பிரேம்ஜித், மண்டோஷ் குமார், ஆதித்யா ஷர்மா, மந்தீப்குமார் ஆகிய 5 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுவிட்டனர். சஞ்சீவ் குமார், சுபம் கோபி ஆகிய இருவர் மட்டும் தலைமறைவாக இருந்து வந்தனர். அவர்களைத் தீவிரமாகத் தேடி வந்தோம்.
இன்று காலை அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்றபோது, திடீரென காவல் துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து காவல் துறையினரும் பதிலுக்குத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் சஞ்சீவ் குமார், சுபம் கோபி ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மற்ற 5 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தாக்குதல் நடத்தியவர்களிடமிருந்து தொழிலதிபரின் கார் மீட்கப்பட்டுள்ளது" என்றார்.