கல்பாக்கம்: கல்பாக்கம் அடுத்த பொம்மராஜபுரம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி நள்ளிரவில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில், இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் 3 தனிப்படைகளை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த பொம்மராஜபுரம் பெரியபாளையத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கன்னியம்மாள் (70). வீட்டில் இட்லிக்கடை நடத்தி வந்தார். இவரது கணவர் கண்ணன் இறந்து விட்டார். மேலும், இவருக்கு 3மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு நீண்ட நேரமாக வீட்டின் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால் அக்கம் பக்கத்தினர், வீட்டை திறந்து பார்த்ததாக தெரிகிறது. அப்போது, வீட்டில் உள்ளே சமையலறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கன்னியம்மாள் கொலை செய்யப்பட்ட நிலையில், இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்த சதுரங்கப்பட்டினம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் நடைபெற்ற இடத்தை மாவட்ட எஸ்.பி சாய் பிரணீத், மாமல்லபுரம் டி.எஸ்.பி ரவி அபிராம் ஆகியோர் அதிகாலையில் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். பின்னர், காஞ்சிபுரத்திலிருந்து மோப்ப நாய் டைகர் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதில், சம்பவம் நடைபெற்ற வீட்டிலிருந்து சுமார் ஒன்றரை கி.மீ.,. தொலைவில் சுடுகாடு பகுதிக்கு மோப்ப நாய் ஓட்டிச்சென்று நின்றது.
இதையடுத்து, எஸ்.பி உத்தரவின் பேரில், போலீஸார் அப்பகுதியில் தடயங்களை சேகரித்தனர். மேலும், கொலை நடந்த பகுதி மற்றும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து 3 தனிப்படைகளை அமைத்து, தனியாக வசித்து வந்த கன்னியம்மாளை நோட்டமிட்டு கழுத்தை அறுத்து கொலை செய்தனரா? எதற்காக கொலை நடந்தது. இட்லிக்கடைக்கு வரும் போதை ஆசாமிகள் கொலை செய்தார்களா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
» சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் திடீர் சோதனை
» சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு லாரியில் வந்த ரூ.3.68 லட்சம் மின்கம்பிகள் மாயம்: போலீஸ் விசாரணை
மேலும், கொலை செய்யப்பட்ட கன்னியம்மாள் அணிந்திருந்த மூக்குத்தி, இரண்டு கம்பல் அவரது உடலில் இருந்து காணாமல் போயிருந்தது போலீஸர் விசாரணையில் தெரிய வந்தது. அதனால், நகைக்காக கொலை செய்யப்பட்டரா என போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.