விக்கிரவாண்டி அருகே ஆசிரியர்களுக்குள் ஏற்பட்ட ஈகோ பிரச்சினை காரணமாக சக ஆசிரியரை போலி புகார் அளித்து போக்சோவின் கீழ் கைது செய்ய வைத்த தலைமை ஆசிரியரைக் கண்டித்தும், கைது செய்யப்பட்ட ஆசிரியரை விடுவிக்க கோரியும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்கூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர் கருணாகரன் (32). பள்ளி தலைமை ஆசிரியையாக புஷ்பராணி மற்றும் ஆசிரியைகள் ராதிகா, திலகா, விஜயலட்சுமி ஆகியோர் பணி புரிகின்றனர்.
கருணாகரனுக்கும் தலைமை ஆசிரியைக்கும் ஏற்பட்ட ஈகோ பிரச்சினையால் சக ஆசிரியைகளுடன் சேர்ந்து பொது மக்கள் சார்பில் கார்த்திகேயன் என்பவர் மூலமாக ஆட்சியருக்கு தொலைபேசியில் போலியாக பாலியல் புகார் கூற வைத்ததாக கிராம பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதனால் நேற்று இரவு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சமூக நலத்துறை அலுவலர் நெப்போலியன் புகாரின் பேரில் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கருணாகரனை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த தகவல் அறிந்த வாக்கூர் கிராம பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் இன்று காலை பள்ளிக்கு முன்பு திரண்டு மாணவர்கள் பள்ளியை புறக்கணித்து ஆசிரியர் கருணாகரன் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை வாபஸ் பெற கோரியும், அவரை விடுவிக்க கோரியும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பள்ளியில் அரையாண்டு தேர்வு நடைபெறுவதால் தேர்வு முடிந்தவுடன் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்று உறுதி அளித்தன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மாணவர்கள் பள்ளிக்குச் சென்றனர்.
பின்னர் மாவட்ட கல்வி அலுவலர் கெளசர், வட்டார கல்வி அலுவலர் ஜெயசங்கர் ஆகியோர் பள்ளி ஆசிரியைகளிடம் விசாரணை செய்தனர். இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனிடம் கேட்டபோது, ’’அப்பள்ளியில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் இரு அணிகள் செயல்பட்டதாக வந்த புகாரின் பேரில் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
விசாரணை அறிக்கை கிடைக்கப்பட்டவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கைது செய்யப்பட்ட கருணாகரன் குழந்தைகளிடம் அன்பாக பழகக்கூடியவர், மாணவர்களின் பிறந்தநாளை பள்ளியிலேயே கொண்டாடுவார். நன்றாக படிக்கும் மாணவர்களை ஊக்குவிப்பார் என்று கூறப்படுவது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும் ’’ என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
நடிகர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை... தொண்டர்கள் அதிர்ச்சி!
அடப் பாவமே... ஜி.பி.முத்துவுக்கா இப்படி நடந்துச்சு?
அவமானப்படுத்திட்டு யாருக்கு வருத்தம் தெரிவிக்கிறார்... ஞானவேலை ராஜாவை வெளுத்து வாங்கிய சசிகுமார்!
திருமண ஊர்வலத்தில் தகராறு... அண்ணன் - தம்பி குத்திக்கொலை!
கணவன்-மனைவி சண்டை... அவசரமாக டெல்லியில் தரையிறங்கிய விமானம்!