கரூர்: காணியாளம்பட்டியில் பாப்பணம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் பேக்கரி வைத்துள்ளார். அருகிலுள்ள வேப்பங்குடியைச் சேர்ந்த இளைஞர்கள் மணிகண்டன் பேக்கரியில் அடிக்கடி தின்பண்டங்கள் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
செப். 8ம் தேதியும் வேப்பங்குடி இளைஞர்கள் பேக்கரி அருகே இருசக்கர வாகனத்தை இயக்கி அதிக ஒலி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. அப்போது, அன்றைய தினம் காவிரி ஆற்றில் விநாயகர் சிலையை கரைத்துவிட்டு கடையில் அமர்ந்து இருந்த பாப்பணம்பட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ரகளையில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்டுள்ளனர்.
அப்போது, பாப்பணம்பட்டியைச் சேர்ந்த இளைஞர்களை, வேப்பங்குடியைச் சேர்ந்தவர்கள் பேக்கரியினுள் புகுந்து தாக்கி, பேக்கரியை அடித்து உடைத்துள்ளனர். இதில் காயமடைந்த பாப்பணம்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜன் (34), சதீஷ்குமார் (27), தினேஷ் (22) ஆகிய 3 பேர் காயமடைந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இது குறித்து வேப்பங்குடியைச் சேர்ந்த லோகேஷ், சங்கர், நிகிலேஷ், நரேன், பிரசாந்த், இளையராஜா, சந்துரு, பாரதிராஜா மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டவர்கள் மீது சிந்தாமணிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து அதில் மூவரை கைது செய்தனர்.
» ராகுல் காந்தியின் நாக்கை வெட்டுபவர்களுக்கு ரூ.11 லட்சம் சன்மானம்: திகில் கிளப்பிய சிவசேனா எம்எல்ஏ
» கணவர் தினமும் குளிப்பதில்லை என விவாகரத்து கேட்கும் புதுமணப்பெண்: ஆக்ராவில் சுவாரஸ்ய வழக்கு
இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்யாததை கண்டித்தும், அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், காவல்துறை ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகக் கூறியும், காணியாளம்பட்டி, உடையாபட்டி, தரகம்பட்டி, சுண்டுக்குழிப்பட்டி, மைலம்பட்டி, உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இன்று (செப். 16ம் தேதி) 500-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தரகம்பட்டியில் உள்ள கடவூர் வட்டாட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கணக்கானோர் முற்றுகையிட்டு 2 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டாட்சியரிடம் மனு அளித்த அவர்கள், ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக கூறியுள்ளனர். போராட்டத்தையொட்டி குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே, வேப்பங்குடியைச் சேர்ந்த முனியப்பன் உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் எஸ்பி அலுவலகத்தில் இன்று (செப். 16ம் தேதி) அளித்த மனுவில்,"காணியாளம்பட்டி பேக்கரி அருகே தங்கள் ஊரைச் சேர்ந்த நிகிலேஷ் செப்.8ம் தேதி இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்தபோது பேக்கரியில் இருந்த பாப்பணம்பட்டியைச் சேர்ந்தவர்கள், சாதியைச் சொல்லி, ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளனர்.
இதையடுத்து இரு பிரிவினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஆனால், வேப்பங்குடியைச் சேர்ந்த இளைஞர்கள் மீது மட்டுமே வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனவே வேப்பங்குடி இளைஞர்களை தாக்கியவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’ என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.