மாட்டிறைச்சி சமைத்த 7 மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றம்: ஒடிசா கல்லூரியில் பரபரப்பு

By KU BUREAU

ஒடிசா: பெர்ஹாம்பூரில் உள்ள பராலா மகாராஜா பொறியியல் கல்லூரியில் மாட்டிறைச்சி சமைத்ததாகக் கூறி 7 மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் கல்லூரி வளாகத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

பெர்ஹாம்பூரில் பராலா மகாராஜா பொறியியல் கல்லூரியின் விடுதியிலிருந்து 7 மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். இது குறித்து டீன் தரப்பில் வெளியான அறிவிப்பில், தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபட்டதன் காரணமாகவும், கல்லூரியின் நடத்தை விதிமுறைகளை மீறியதாலும் இந்த நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதில் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. மேலும், வெளியேற்றப்பட்ட மாணவர்களில் ஒருவருக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த மாணவர்கள் புதன்கிழமை இரவு ஹாஸ்டலில் மாட்டிறைச்சி சமைத்ததாக் கூறப்படுகிறது. இது குறித்து மற்றொரு மாணவர் குழு டீனுக்கு புகார் தெரிவித்தன. அந்த குழுக்கள் அளித்த புகாரின்படி, “அனைத்து மாணவர்களின் மதிப்புகள் மற்றும் நம்பிக்கைகளை மதிப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்த சம்பவம் (மாட்டிறைச்சி சமைப்பது) விடுதியில் அமைதியின்மையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது பதற்றமான சூழலுக்கு வழிவகுத்துள்ளது. சம்பவத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம் ”என்று தெரிவிக்கப்பட்டது.

பஜ்ராங் தள் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் உறுப்பினர்களும் கல்லூரிக்குச் சென்று மாணவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைத்தனர். மாணவர் குழுவின் புகாரைத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் குறித்து கல்லூரி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கல்லூரி வளாகத்திற்குள் சில தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்ததால், மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என கல்லூரி தரப்பு தெரிவித்துள்ளது..

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE