​கத்தை, கத்தையாக சிக்கிய ரூ.1.25 கோடி ஹவாலா பணம்: சென்னையில் பரபரப்பு!

By காமதேனு

சென்னையில் ஆட்டோவில் கொண்டு வந்த 1.25 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வடமாநில வாலிபரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை வியாசர்பாடி நேரு நகரைச் சேர்ந்தவர் வெற்றிவேல் (40). ஆட்டோ ஓட்டுநரான இவர் நேற்று இரவு கொளத்தூர் ரெட்டை ஏரி பகுதியில் இருந்து பயணி ஒருவரை ஏற்றிக் கொண்டு பாரிமுனையில் உள்ள என்எஸ்சி போஸ் சாலைக்கு சென்று கொண்டிருந்தார்.

ஆட்டோ மின்ட் தெரு சந்திப்பு அருகே வரும்போது ஆட்டோ ஓட்டுநருக்கு பயணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடந்துள்ளது. அப்போது அவ்வழியாக வந்த வண்ணாரப்பேட்டை ரோந்து போலீஸார் சந்தேகத்தின் பேரில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் பயணியைப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் ஆட்டோவில் வந்த பயணியின் உடைமைகளைச் சோதனை செய்தனர். அப்போது அதில் 1.25 கோடி ரூபாய் ஹவாலா பணம் இருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர்.

ஹவாலா பணத்துடன் சிக்கிய வடமாநில இளைஞர் திரியாஷீல்

இதுதொடர்பாக பயணியிடம் விசாரணை நடத்தியதில் அவர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த திரியாஷீல்(25) என்பது தெரியவந்தது. மேலும் இவர் விஜயவாடாவில் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு பேருந்தில் மாதவரம் வந்து இறங்கியதும், அங்கிருந்து ஆட்டோவில் என்எஸ்சி போஸ் சாலைக்கு சென்று அங்கு நகைக்கடை நடத்தி வரும் விகாஷ் பவர் என்பவரிடம் பணத்தைக் கொடுப்பதற்காக கொண்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் பணத்திற்கு உண்டான ஆவணங்கள் ஏதும் இல்லாததால் 1.25 கோடி ரூபாயை பறிமுதல் செய்த போலீஸார் பிடிபட்ட வட மாநில வாலிபர் திரியாஷீல் மற்றும் பணத்தை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். திரியாஷீலிடம் ஹவாலா பணம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வால்டாக்ஸ் சாலையில் ஆட்டோவில் கொண்டு சென்ற 2.1 கோடி ரூபாய் ஹவாலா பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE