சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தால் போக்குவரத்து பாதிப்பு

By KU BUREAU

வேலூர்: வேலூர் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென காரை திருப்பிய ஓட்டுநரால் அடுத்தடுத்து வந்த கன்டெய்னர் லாரியும், அரசுப் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் கார், லாரி, அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் உட்பட மொத்தம் 18 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து ஒன்று நேற்று முன்தினம் நள்ளிரவு தேவனாம்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் கொணவட்டம் அருகே சென்றபோது முன்னால் கன்டெய்னர் லாரி ஒன்றும், அந்த லாரிக்கு முன்பாக சொகுசு கார் ஒன்றும் சென்றுள்ளன. இதற்கிடையில், காருக்கு முன்பு அடையாளம் தெரியாத விலங்கு ஒன்று சென்றதாக தெரிகிறது. அதன் மீது மோதாமல் இருக்க கார் ஓட்டுநர் திடீரென திருப்பியுள்ளார்.

இதனால், பின்னால் வந்து கொண்டிருந்த கன்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக காரின் பின்பகுதியில் மோதியது. இதனைத்தொடர்ந்து, வந்த அரசுப் பேருந்தும் லாரியின் மீது மோதி அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் கார் ஓட்டுநர், லாரி ஓட்டுநர், பேருந்து ஓட்டுநர் உட்பட 18 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த வடக்கு காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

மேலும், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வடக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE