ராஜஸ்தான் மாநிலம் பிகேனர் மாவட்டத்தில் உள்ள பஜ்ஜூ பகுதியில் இன்று தனியார் பள்ளிப் பேருந்து ஒன்று நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது, பஜ்ஜு பகுதியில் உள்ள கால்வாயின் அருகே சென்றபோது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பேருந்தில் சிக்கிக் கொண்ட மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பஜ்ஜு போலீஸார், பொதுமக்கள் உதவியுடன் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில் சிக்கி காயமடைந்த மாணவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. மாணவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து அதிவேகமாக சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. ஆனால், முழுமையான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்திய பிறகே விபத்துக்கான காரணம் குறித்து முழுமையாக தெரிய வரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.