அதிர்ச்சி...ராணுவவீரர் மீது கொலைவெறி தாக்குதல்; உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை!

By காமதேனு

உத்தரப்பிரதேசத்தில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் மீது ஒரு கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியதில் அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிஎஸ்எஃப்

உத்தரப்பிரதேச மாநிலம், மௌதாஹா கோட்வாலி நகரில் உள்ள மொஹாலேயைச் சேர்ந்தவர் முஹம்மது ஷாஹித். எல்லைப் பாதுகாப்பு படை(பிஎஸ்எஃப்) வீரரான இவரது வீட்டின் அருகே குழந்தைகள் நேற்று பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.

அவர்களை ஷாஹித் தலையிட்டு தடுக்க முயன்றார். அப்போது பத்துக்கும் மேற்பட்டோர் தடி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ஷாஹித்தை கொடூரமாக தாக்கினர். தன்னை விட்டு விடும்படி அவர் கெஞ்சியும் அக்கும்பல் அரைமணி நேரத்திற்கும் மேலாக அவரைத் துரத்தி துரத்தி தாக்கியது. இதில் ஷாஹித் படுகாயமடைந்தார்.

அங்கிருந்த பொதுமக்கள், ஷாஹித்தை அருகில் உள்ள சுகாதார மையத்திற்குக் கொண்டு சென்றனர். ஆனால், ஷாஹித்தின் நிலை மோசமாக இருப்பதைக் கண்ட மருத்துவர் அவரை உடனடியாக சிறப்பு மருத்துவ சிகிச்சைக்காக கான்பூரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல பரிந்துரைத்தார். இதையடுத்து தற்போது கான்பூரில் உள்ள மருத்துவமனையில் ஷாஹித் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதல் பட்டாசு வெடித்ததால் நடக்கவில்லை என முஹம்மது ஷாஹித்தின் சகோதரி ஃபர்சானா கூறியுள்ளார். இந்த தாக்குதலுக்குப்பின் உள்நோக்கம் உள்ளது என்றும் கூறியுள்ளார். இந்த தாக்குதல் குறித்து மௌதாஹா காவல் நிலைய போலீஸார், எஸ்.பி மாவட் தலைவர் இத்ரிஷ் கானின் மகன் முகீம் உள்பட 22 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெயரிடப்பட்ட 16 பேர் மற்றும் அடையாளம் தெரியாத 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மௌதாஹா காவல் நிலைய அதிகாரி சுரேஷ் குமார் சைனி உறுதிப்பட கூறினார்.

எல்லைப் பாதுகாப்பு படை வீரர் மீது நடத்தப்பட்ட கொலை வெறித்தாக்குதல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE