நாங்குநேரி அருகே கட்டுப்பாட்டை இழந்த நிலையில், தடுப்பு சுவரில் மோதிய கார் விபத்தில் புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காரில் பயணம் செய்த 3 செய்தியாளர்கள் காயத்துடன் உயிர் தப்பினர்.
சந்திரயான்3 தொடர்பான செய்திக்கு விஞ்ஞானி நம்பி நாராயணனை நேரில் சந்தித்து செய்தி எடுப்பதற்காக நெல்லையிலிருந்து செய்தியாளர் குழு ஒன்று நேற்று மாலை ஒரு காரில் புறப்பட்டு திருவனந்தபுரம் சென்றது. செய்தியாளர் சந்திப்பு முடிந்ததும் அக்குழுவினர் அங்கிருந்து காரில் மீண்டும் நெல்லை நோக்கி திரும்பி வந்துள்ளனர். இரவு 9 மணி அளவில் நெல்லை மாவட்டம், நாங்குநேரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மில் அருகே கார் கட்டுப்பாட்டு இழந்து சாலை நடுவில் உள்ள தடுப்புச் சுவர் மீது மோதி கவிழ்ந்தது.
அதில் காரை ஓட்டி வந்த புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர்(33) தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் புதிய தலைமுறை செய்தியாளர் நாகராஜன்(45), புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் நாராயணன் (35), நியூஸ் 7 ஒளிப்பதிவாளர் வள்ளிநாயகம் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த ஒளிப்பதிவாளர் சங்கருக்கு மனைவியும், 7 வயதில் மகனும் உள்ளனர். விபத்தில் பலியான சங்கரின் மகனுக்கு இன்று பிறந்தநாள். தந்தை வேலை முடிந்து வீடு திரும்பியதும் பிறந்தநாள் கொண்டாட காத்திருந்த குடும்பத்தினருக்கு, பேரிடியாய் வந்த சங்கரின் மரண செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.