விரட்டி விரட்டி கடித்த வெறிநாய்... ரத்தகாயங்களுடன் 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

By காமதேனு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்களை விரட்டி விரட்டி வெறிநாய் கடித்ததில் 5 பேர் ரத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களிலும் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். சென்னையில் ரேபிஸ் நோய்த் தொற்றுடன் சுற்றி திரிந்த தெரு நாய் ஒன்று அடுத்தடுத்து 27 பேரை கடித்து காயப்படுத்திய சம்பவம், மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

பல இடங்களில் சிறுவர்கள் மற்றும் முதியவர்களை தெரு நாய்கள் கடித்துக் குதறிய சம்பவங்கள் தொடர்கதையாக மாறிவிட்ட நிலையில், தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லையால் மக்கள் அச்சம்

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லூரி சாலையில் இன்று காலை நடைபயிற்சியில் பலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று திடீரென அங்கிருந்தவர்களை விரட்டி விரட்டி கடிக்கத் தொடங்கியது. இதில் 5 பேருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் உடனடியாக காரைக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லையால் மக்கள் அச்சம்

கடிபட்ட அனைவருக்கும் வெறிநாய் கடிக்கான தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனிடையே தொடர்ந்து அதிகரித்து வரும் தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE