புதுடெல்லி: பீகார் மாநிலம் பாரௌனியில் இருந்து புது டெல்லிக்கு சென்ற ரயிலில், 11 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம்சாட்டி ரயில்வே ஊழியர் ஒருவர் பயணிகளால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
பீகாரில் சிவானைச் சேர்ந்த ஒரு குடும்பம் புதன்கிழமை பாரௌனியிலிருந்து புது டெல்லிக்கு சென்ற ஹம்சஃபர் எக்ஸ்பிரஸில் பயணம் செய்துள்ளனர். இரவு 11.30 மணியளவில் குரூப் டி ரயில்வே ஊழியர் பிரசாந்த் குமார், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமியை தனது இருக்கையில் உட்கார வைத்தார். பின்னர் சிறுமியின் தாய் கழிவறைக்கு சென்றபோது. பிரசாந்த் குமார் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது.
அந்த பெண் கழிவறையை விட்டு வெளியே வந்ததும், சிறுமி தனது தாயிடம் ஓடி வந்து கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்தாள். மேலும், தாயை கழிவறைக்கு அழைத்துச் சென்று தனக்கு நடந்ததை கூறியுள்ளார். அவர் ரயிலில் ஏசி பெட்டியில் இருந்த தனது கணவர், மாமனார் மற்றும் பிற பயணிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
ரயில் லக்னோவில் உள்ள ஐஷ்பாக் சந்திப்பை அடைந்தபோது கோபமடைந்த பயணிகள் மற்றும் குடும்பத்தினர் பிரசாந்த் குமாரைப் பிடித்து, கதவுகளுக்கு அருகிலுள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று, ரயில் கான்பூர் சென்ட்ரலை அடையும் வரை ஒன்றரை மணி நேரம் கடுமையாக தாக்கியுள்ளனர்.
» அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் தாமே முன்வந்து மன்னிப்புக் கோரினார்: வானதி சீனிவாசன் அதிரடி
வியாழக்கிழமை அதிகாலை 4.35 மணியளவில் ரயில் கான்பூர் சென்ட்ரலை அடைந்தபோது, ரயில்வே காவல்துறை அதிகாரிகள் பிரசாந்த் குமாரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து சிறுமியின் குடும்பத்தினர் பிரசாந்த் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த நிலையில், பிரசாந்தின் குடும்பத்தினர் கொலை புகார் அளித்துள்ளனர்.