ஹைதராபாத்: குவைத்துக்கு வேலைக்காக சென்ற ஆந்திராவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது முதலாளியால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடுமையாக துன்புறுத்தப்படுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அன்னமய்யா மாவட்டத்தைச் சேர்ந்த கவிதா என்ற அந்த பெண், ஆந்திர அமைச்சர் ராம் பிரசாத் ரெட்டியிடம், தன்னை சித்திரவதையில் இருந்து காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர், “தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள் ஐயா. நான் இங்கே சித்திரவதைக்கு உள்ளாகிறேன். எனக்கு இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளி கணவர் உள்ளார். நான் அவர்களுக்காக பணம் சம்பாதிக்க குவைத் வந்தேன், ஆனால் நான் இங்கே அநீதிக்கு ஆளாகிறேன்.
குவைத்தில் ஒரு அறையில் என்னை முதலாளி பூட்டிவைத்து உணவு வழங்க மறுக்கிறார். வேலை செய்யும் இடத்தில் வீட்டுக் காவலில் வைத்துள்ளார்கள். எனக்கு வேலைக்கு ஏற்பாடு செய்த ஏஜென்ட் என்னை அச்சுறுத்தி, எனது தொலைபேசி பிடுங்கி வைத்துக்கொண்டார். இதனால் குடும்பம் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளமுடியவில்லை” என தெரிவித்துள்ளார்.
கவிதாவின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக ஆந்திர அமைச்சர் ராம் பிரசாத் ரெட்டி, கவிதாவை இந்தியாவுக்கு பாதுகாப்பாக திரும்ப அழைத்துவர வழிவகை செய்யுமாறு மத்திய அமைச்சர் கொண்டபள்ளி ஸ்ரீனிவாஸுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
» நெல்லையில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை - ‘போக்சோ’வில் 2 ஆசிரியர்கள் கைது
» திமுக எந்த மிரட்டலுக்கும் பயப்படும் கட்சி அல்ல: அமைச்சர் ரகுபதி