மதுவிலக்கு அமலில் இருக்கும் பிஹாரில் மதுவிருந்து: நிதிஷ்குமார் கட்சி நிர்வாகி கைது

By KU BUREAU

பிஹார்: நாளந்தா மாவட்டத்தில் மது மற்றும் சூதாட்ட விருந்தில் நடத்தியதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிர்வாகி சீதாராம் பிரசாத் உட்பட 14 பேரை பீகார் காவல்துறை கைது செய்தது.

நாளந்தா மாவட்டத்தின் ஆம்பர் பகுதியில் சூதாட்டத் தொழில் மற்றும் சட்டவிரோத மதுபான விருந்து நடத்தியதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் அஸ்தவான் தொகுதி தலைவர் சீதாராம் பிரசாத் உள்ளிட்ட 14 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். போலீஸார் நடத்திய சோதனையில், ​​292 லிட்டர் வெளிநாட்டு மதுபானம், 10 சூதாட்ட அட்டை கட்டுகள், ஒன்பது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 14 செல்போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என பிஹார் காவல்துறையின் நிலையப் பொறுப்பாளர் சாம்ராட் தீபக் கூறினார்.

இதனையடுத்து கட்சியின் அஸ்தவான் தொகுதி தலைவராக இருந்த பிரசாத்தை கட்சியில் இருந்து நீக்குவதாக ஐக்கிய தனதா தளம் கட்சி அறிவித்துள்ளது. அந்த அறிக்கையில், “ஜேடியு தலைவர் சீதாராம் பிரசாத், மதுபான வழக்கில் தொடர்புடையது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கட்சியின் நற்பெயரைக் காயப்படுத்தியுள்ளது. எனவே, அஸ்தவான் தொகுதி தலைவர் சீதாராம் பிரசாத் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டு, கட்சியில் இருந்தும் நீக்கப்படுகிறார்" என்று தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் பிஹார் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் அமைச்சரும், ஜேடியுவின் நாளந்தா மாவட்ட பொறுப்பாளருமான விஜய் சவுத்ரி, “இந்த கைதுகள் பிஹார் அரசின் நம்பகத்தன்மையை காட்டுகிறது. சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், சொந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட சட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்று கூறினார்.

மறுபுறம், இஸ்லாம்பூரின் ஆர்ஜேடி எம்எல்ஏ ராகேஷ் ரோஷன் கடுமையாக மாநில அரசை விமர்சித்துள்ளார். நிதிஷ்குமார் அரசாங்கத்தின் பாதுகாப்பில் ஒரு 'மது மாஃபியா' உருவாக்கப்படுகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE