கோவை மாநகரில் விதிகளை மீறிய வேகத்தடைகள்: தொடரும் உயிரிழப்புகளால் சோகம்

By KU BUREAU

கோவை: கோவை மாநகரில் வாகனங்களின் வேகத்தைகட்டுப்படுத்தும் வகையில் ஆயிரக்கணக்கான வேகத்தடைகள் உள்ளன. இவ்வாறு அமைக்கப்படும் வேகத்தடைகளுக்கு ஐ.ஆர்.சி எனப்படும் இந்தியன் சாலை பாதுகாப்புக் குழுவின் சார்பில் அளவுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அந்தந்த சாலைகளி்ல் நிர்ணயிக்கப்பட்டுள்ள வேகத்துக்கு ஏற்ப இந்த வேகத்தடைகளின் உயர, அகல அளவுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆனால், கோவை மாநகரில் பல இடங்களில் இந்த வேகத்தடைகள் நிர்ணயிக்கப்பட்ட உயர, அகல அளவுகளில் இல்லை.

இதுகுறித்து சமூக செயல்பாட்டாளர்கள்கூறும்போது, ‘‘மாநகரில் வேகத்தடைகள் சீரான அளவுகளில் இல்லை.சில இடங்களில் உயரமாகவும், சில இடங்களில் சிறியதாகவும்காணப்படுகின்றன. இவைஅடையாளப்படுத்தப்படாமலும் உள்ளன. கொடிசியா சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனியார் பள்ளி நிர்வாகத்தினர் அமைத்த வேகத்தடையால், வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

செளரிபாளையம் ஜிவி ரெசிடென்சி சாலையில், உயரமான வேகத் தடையை கடக்கும் போது, வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த பெண் கீழே விழுந்து தலையில் காயமடைந்து உயிரிழந்தார். அதன் தொடர்ச்சியாக இரு தினங்களுக்கு முன்னர் சுண்டக்காமுத்தூரைச் சேர்ந்த சக்திசரண்(24) என்ற இளைஞர், சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தபோது, வேகத்தடையை பார்த்து வாகனத்தை நிறுத்த முயன்றபோது கீழே விழுந்து உயிரிழந்தார்.

இதுபோன்றசம்பவங்களைத் தடுக்க வேகத்தடைகளை சீரான அளவுகளில் அமைப்பதோடு, வெள்ளைக்கோடு, ஒளிரும் பட்டைகள் அமைத்து அடையாளப்படுத்த வேண்டும். தன்னிச்சையாக வேகத்தடைகள் அமைக்கும் தனியார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

நெடுஞ்சாலைத்துறை மற்றும் சாலை பாதுகாப்புக்குழுவினர் கூறும்போது, ‘‘10 செ.மீஉயரத்தில் 3 மீட்டர் அகலத்தில் வேகத்தடைகள் அமைக்கப்பட வேண்டும். வாகனவேக நிர்ணய அளவுக்கு ஏற்ப 3.5, 4, 4.5மீட்டர் என அகல அளவு மாறும். ஆனால்,பல இடங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவுகளில் வேகத்தடைகள் இல்லை என புகார்கள் வந்துள்ளன.

இதுதொடர்பாக சாலை பாதுகாப்புக்குழுக் கூட்டத்தில்விவாதித்து ஆட்சியர் அறிவுறுத்தலின்பேரில், வேகத்தடைகள் சரியானஉயரத்துக்கு மறுசீரமைப்பு செய்யப்பட்டு வந்தன. தற்போது அப்பணிதொய்வடைந்துள்ளதாக தெரிகிறது. இதை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

மாநகர காவல்துறை உயரதிகாரிகள் கூறும்போது, ‘‘சமீபத்தில் நடத்திய ஆய்வில் மாநகரில் 245 வேகத்தடைகளில் 44 வேகத்தடைகள் மட்டுமே விதிகளை கடைபிடித்து அமைக்கப்பட்டுள்ளது தெரிந்தது. மீதமுள்ள201 வேகத்தடைகள் குறிப்பிட்ட அளவை காட்டிலும் உயரமாக இருப்பது, அடையாளப்படுத்தப்படாமல் இருப்பது தெரியவந்தது. எனவே, காவல்துறை சார்பில் மாநகரில் வேகத்தடையை சரி செய்வது தொடர்பான ஆய்வறிக்கையை சாலை பாதுகாப்புக்குழுவுக்கு அனுப்பியுள்ளோம்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE