‘போலீஸ் அக்கா’ - கோவையில் கல்லூரி மாணவிகளை பாதுகாக்கும் அசத்தல் திட்டம்!

By டி.ஜி.ரகுபதி

கோவை: பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பள்ளி, கல்லூரிகள், பணிபுரியும் இடங்கள், வீடுகள் என எல்லா இடங்களிலும் நடக்கின்றன. பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படுபவர்கள் புகார் அளிக்க முடியாதபடி மிரட்டலுக்கும் ஆளாகின்றனர்.

பல இடங்களில் தங்களது எதிர்காலம் கருதியும், பயம் காரணமாகவும் புகார் அளிக்க தயங்கும் நிலை உள்ளது. அதையும் மீறி வரும் புகார்களின் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இச்சூழலில், பதின் பருவ பெண்களான கல்லூரி மாணவிகளிடம் பாலியல் குற்றங்கள் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ‘போலீஸ் அக்கா’ என்ற திட்டத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் பணியை கோவை மாநகர காவல்துறையினர் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து கோவை மாநகர காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநகரில் மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கலை அறிவியல் என பல்வேறு பட்டப்படிப்புகளை கற்பிக்கும் 71 கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது காவல்துறையினரின் கடமைகளில் ஒன்று. எனவே, இந்த 71 கல்லூரிகளுக்கும் சேர்த்து மொத்தம் 37 பெண் காவலர்கள் நியமி்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளுக்குச் சென்று, மாணவிகளிடம் தோழியை போல், சகோதரியை போல் மனம் விட்டு பேசுவர்.

போலீஸ் அக்கா திட்டம் குறித்து கோவையில் தனியார் கல்லூரியில் விழிப்புணர்வு
ஏற்படுத்திய மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் மற்றும்
துணை ஆணையர்கள் ஸ்டாலின், சுஹாசினி ஆகியோர்.

பாலியல் குற்றங்கள் என்றால் என்ன, அதை தடுப்பது எப்படி, பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டால் யாரிடம் புகார் அளிக்கவேண்டும், சைபர் கிரைம்குற்றங்கள் என்றால் என்ன, அது போன்றமோசடிகளில் சிக்காமல் இருப்பது எப்படி, சமூக வலைதளங்களை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்களை வழங்குவர்.

இதைத் தொடர்ந்து தங்களது செல்போன் எண்களை பகிர்ந்துகொள்வர். மேற்கண்ட பிரச்சினைகள் தொடர்பாக தயக்கமின்றி புகார் தெரிவிக்க நம்பிக்கை ஊட்டுவர். பாலியல் குற்றங்கள், சைபர் குற்றங்கள், மன உளைச்சலுக்கு வழிவகுக்கும் செயல் களில் பாதிக்கப்பட்டால் உடனடியாக அம்மாணவிகள் ‘போலீஸ் அக்கா’ திட்டத்தில் உள்ள அந்த காவலரை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

அந்த புகாரின் அடிப்படையில் சிஎஸ்ஆர் பதிவு, வழக்குப்பதிவு, கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, அந்த மாணவிக்கு ஏற்பட்ட இன்னல்களும் தீர்ந்து, அவர் படிப்பில் தொடர்ந்துகவனம் செலுத்த வழிவகை ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE