கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 2 வயது ஆண் குழந்தையை முகத்தில் துணியை வைத்து அமுக்கி கொலை செய்த தாயை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, கந்தன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்தி (27). இவரது மனைவி அகல்யா (19). இவர்களுக்கு திருமணமாகி 2 வயதில் சசிதரன் என்கிற குழந்தை உள்ளது. கணவன், மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, அகல்யா பண்ருட்டி அடுத்த ஒறையூரில் உள்ள பெற்றோர் வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 22ம் தேதி, காலை 10 மணிக்கு குழந்தை சசிதரனுக்கு இட்லி ஊட்டியதாகவும், பின் 12 மணிக்கு பார்த்தபோது குழந்தை இறந்த நிலையில் கிடந்ததாகவும் அகல்யா அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள், ஒறையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்.
அத்துடன் குழந்தையின் கழுத்தில் ரத்த தடம் இருந்ததைக் கண்ட மருத்துவர், உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன் புதுப்பேட்டை போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து வந்த புதுப்பேட்டை போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அதில் தாய் அகல்யா, குழந்தையின் முகத்தை போர்வையால் அழுத்தி கொலை செய்துள்ளது தெரியவந்தது.
சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்துவிட்ட அகல்யா, தனது அத்தை பச்சையம்மாளுடன் வாழ்ந்து வந்துள்ளார். 15 வயதிலேயே கூலி வேலைக்கு செல்ல ஆரம்பித்தவர் திருச்செங்கோடு பகுதியில் கூலி வேலை செய்தபோது அப்பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் நான்கு மாதத்தில் அவரது வீட்டாருக்கும் இவருக்கும் ஒத்துவரவில்லை.
அதனால் கணவர் மீது போலீஸில் அகல்யா புகார் கொடுத்தார். இதையடுத்து கணவர் கைது செய்யப்பட்டார். அதையடுத்து தாய் ஊரான ஒறையூரில் தங்கியிருந்துள்ளார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொண்டு குழந்தையும் பெற்றுக் கொண்டு இப்படி சீரழிந்து விட்டாள் என்று பேசியிருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் வெளியில் வேலைக்கு சென்று வருவதற்கும் குழந்தை இடையூறாக இருந்ததால் குழந்தையை கொலை செய்துள்ளார்.
குழந்தையை புதைத்து விடலாம் என்று அவர் திட்டமிட்டிருந்த நிலையில் தான் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையின் சாவில் சந்தேகம் ஏற்பட்டதால் போலீஸில் வகையாக சிக்கிக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.