மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் வன்முறையினால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. நேற்று நடந்த வன்முறையில் குகி இன தன்னார்வலர்கள் மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பதற்றத்தை அதிகரித்து உள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் குகி மற்றும் மைத்தேயி சமூக மக்களிடையே மோதல் நிலவி வருகிறது. கடந்த மே மாத தொடக்கத்தில் ஆரம்பித்த இந்த மோதலால் பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் வீடு மற்றும் உடமைகளை இழந்து சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக அவதியுற்று வருகின்றனர்.
இந்த கலவரத்தின் போது குகி சமூக பெண்கள் இருவர் நிர்வாண நிலையில் ஊர்வலமாக இழுத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 3 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் இந்த கலவரம் கட்டுக்குள் வந்ததாக கூறப்பட்டாலும் ஆங்காங்கே அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.
உக்ரூல் மாவட்டத்தில் நேற்று நடந்த வன்முறையில் 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலியாகி உள்ளனர். இங்குள்ள தவாய் கிராமத்தில் நடந்த வன்முறையில் குகி இனத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் மூவர் துப்பாக்கி சூட்டில் பலியாகி உள்ளதாக அம்மாநில போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை 190 பேர் உயிரிழந்திருப்பதாக போலீஸார் அறிவித்துள்ளது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.