ஷாக் வீடியோ... ரயில் தண்டவாளத்தில் தள்ளி இளைஞர் கொலை.. தம்பதி கைது!

By காமதேனு

மும்பையில் 26 வயது இளைஞர் ஒருவரை கணவன், மனைவி ரயில்வே தண்டவாளத்தில் தள்ளிவிட்டுக் கொலை செய்தது சிசிடிவி காட்சி மூலம் அம்பலமாகியுள்ளது.

மும்பை புறநகரில் சியோன் ரயில் நிலைய தண்டவாளத்தில் விழுந்து இளைஞர் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். விசாரணையில்,அவரது பெயர் தினேஷ் என்று தெரியவந்தது. அவர் எப்படி விழுந்தார் என்பது குறித்து ரயில்வே போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் அதிர்ச்சி அளிக்கும் உண்மை அம்பலமானது. தினேஷ் நடந்துவரும் போது ஷீத்தல் மானே (26) என்ற பெண் மீது மோதியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பெண், இளைஞர் தினேஷை குடையால் பலமுறை தாக்கினார்.

சிசிடிவி காட்சி

இதையடுத்து, ஷீத்தலின் கணவர் அவினாஷ், இளைஞரை கன்னத்தில் அறைந்தார். இதில் நிலை தடுமாறிய தினேஷ் தண்டவாளத்தில் விழுந்தது சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. அப்போது கீழே விழுந்த இளைஞரைக் காப்பாற்ற பயணிகள் முயற்சி செய்தனர்.

ஆனாலும் அப்போது விரைவாக வந்த ரயில் ஒன்று மோதியதில் இளைஞர் தினேஷ் உடல் நசுங்கி பலியானார். இளைஞரை தள்ளிவிட்டது தம்பதி தான் என்பதை சிசிடிவி காட்சி மூலம் ரயில்வே போலீஸார் உறுதி செய்தனர்.

கைது செய்யப்பட்ட தம்பதி.

இதனையடுத்து ஷீத்தல், அவரது கணவர் அவினாஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE