702 ஆண்டுகள் சிறை, 234 பிரம்படிகள்; மகள்களை சீரழித்த தந்தை மீது பாய்ந்தது சட்டம்!

By காமதேனு

மலேசியா தேசத்தில் தனது இரு மகள்களை சீரழித்த தந்தைக்கு 702 ஆண்டுகள் சிறை மற்றும் 234 பிரம்படிகள் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை நிச்சயம் என்ற பாடத்தையும் மலேசிய நீதிமன்றம் புகட்டி உள்ளது.

குற்றமிழைத்த நபருக்கு வழங்கப்படும் தண்டனை என்பது அந்த நபரை திருத்துவது மற்றும் தண்டிப்பது மட்டுமன்றி, அதன் மூலம் பொதுசமூகத்துக்கு ஓர் எச்சரிக்கை விடுப்பதையும் நோக்கமாக கொண்டிருக்கும். அது போன்ற குற்றங்கள் தொடர்ந்து நிகழ்வதை தடுக்கவும், குற்ற எண்ணம் கொண்டவர்கள் அவற்றை தவிர்க்கவும் அவசியமான தகவலை அந்த தீர்ப்புகள் அடக்கியிருக்கும். அந்த வகையில் மலேசியா தேசத்தில் போதை மற்றும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடும் தண்டனைகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

பதின்ம வயதாகும் தனது இரு மகள்களை பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கிய தந்தைக்கு, தற்போது விதிக்கப்பட்ட கடும் தண்டனையும் அவ்வாறு கவனம் பெற்றுள்ளது. மலேசியாவின் ஜொஹோர் மாகாணத்தின் முவார் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு இரு மகள்கள். தற்போது 12 மற்றும் 15 வயதாகும் அந்த இரு குழந்தைகளையும், கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக, அந்த கொடூரத் தந்தை அண்மையில் கைதானார்.

நீதிமன்ற உத்தரவு

மலேசிய சட்டத்தின் பார்வையில் மிகவும் மோசமான குற்றமாக இவை கவனம் பெற்றன. விரைவு நீதிமன்றத்தில் சடுதியில் விசாரணை முடிவடைந்ததில், அந்த தந்தைக்கு 702 ஆண்டுகள் சிறை தண்டனையும், 234 பிரம்படிகளும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வருடக்கணக்கில் நீடித்த பாலியல் வன்முறையில், பெற்ற தந்தையால் 15 வயது மகள் கர்ப்பமான பிறகே வெளியுலகுக்கு விவகாரம் பிடிபட்டது. நீதிமன்ற விசாரணை தொடங்கியது முதலே, கடும் தண்டனை குறித்த எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் நீடித்ததில், அவற்றை நிறைவேற்றும் வகையில் 702 ஆண்டுகள் சிறை தண்டனையும் 234 பிரம்படிகளும் வழங்கி மலேசிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE