அதிர்ச்சி! டிராலியில் 5 கிலோ கடத்தல் தங்கம்... சிக்கிய 8 வெளிநாட்டு நபர்கள்... டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு

By காமதேனு

உஸ்பெகிஸ்தானில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 5 கிலோ தங்கம் விமான நிலைய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

எப்போதும் பரபரப்பாக செயல்படும் விமான நிலையங்களுள் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் முதன்மையானது. நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த விமான நிலையத்தில் கடுமையான சோதனைகள் எப்போதும் செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில் உஸ்பெகிஸ்தானில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் தங்கம் கடத்திவரப்படுவதாக டெல்லி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இன்று காலை ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, உஸ்பெகிஸ்தானில் இருந்து இன்று காலை டெல்லி வந்த விமானத்தில் இறங்கிய அனைத்து பயணிகளையும், அவர்களது உடமைகளையும் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது பயணிகள் தங்களது உடமைகளை வைத்து எடுத்து செல்லும் லக்கேஜ் ட்ராலிகளையும் அவர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அதில் ஒருசில ட்ராலிகளில் பசை வைத்து ஒட்டப்பட்டு மறைத்து எடுத்து வரப்பட்ட 5 கிலோ தங்கத்தை அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். மேலும் அந்த தங்கத்தை கடத்தி வந்த உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE