பகீர்... காதலனின் மகனைக் கொன்று, உடலை மெத்தைக்கு அடியில் போட்டு விட்டு கிளம்பிய இளம்பெண்!

By காமதேனு

தன்னுடைய லிவ் இன் காதலன், தன்னை விட்டு மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்ததால் ஆத்திரமடைந்த காதலி, காதலனின் மகனை கொலை செய்துள்ள சம்பவம் டெல்லியை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

டெல்லியின் இந்திரபுரி பகுதியை சேர்ந்தவர் ஜிதேந்தர். இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனைவி மற்றும் மகன் திவ்யன்ஷ் (11) ஆகியோரை கடந்த 2019-ம் ஆண்டு முதல் பிரிந்து, பூஜா குமாரி ( 24) என்ற இளம்பெண்ணுடன் லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தார்.

கடந்த 3 ஆண்டுகளாக பூஜா குமாரியுடன் வாழ்ந்து வந்த நிலையில் அவ்வப்போது தன் முதல் மனைவியை விவாகரத்து செய்யும்படி ஜிதேந்தரிடம் பூஜா குமாரி வலியுறுத்தி வந்தார். இதனால் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பூஜா குமாரியை விட்டு பிரிந்த ஜிதேந்தர் தன் முதல் மனைவி மற்றும் மகனுடன் சேர்ந்தார்.

ஆனால், ஜிதேந்தரை மீண்டும் அடைய நினைத்த பூஜா குமாரி, ஜிதேந்தர் மனைவிக்கு விவாகரத்து கொடுக்க மறுப்பதற்கு அவரின் 11 வயது மகன் திவ்யன்ஷ் தான் காரணம் என நினைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜிதேந்தரின் மகன் திவ்யனை கொலை செய்ய திட்டமிட்டார்.

கடந்த 10ம் தேதி ஜிதேந்தரின் வீட்டிற்கு சென்ற பூஜாகுமாரி யாரும் இல்லாத நிலையில் அங்கு தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் திவ்யன்ஷை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் திவ்யன்ஷின் உடலை மெத்தையின் அடியில் துணிகள் வைக்கும் அறையில் மறைத்து வைத்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

வெகுநேரம் கழித்து வீட்டிற்கு வந்த ஜிதேந்தர் மற்றும் அவரது மனைவி, தங்கள் மகனை தேடிய போது அவன் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். கண்காணிப்பு கேமராக்களை பார்த்த போது முகத்தை மூடிக் கொண்டு ஒரு பெண் ஜிதேந்தரின் வீட்டிற்குள் செல்வதும் பின்னர் வெளியேறுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

அந்த காட்சிகளின் அடிப்படையில் 300க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து நேற்று பூஜாகுமாரியை போலீஸார் கைது செய்தனர். லிவ் இன் காதலன் விட்டு சென்றதால் அவரின் மகனை இளம்பெண் கொலை செய்துள்ள சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE