தூத்துக்குடி : வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் லாரி செட் உரிமையாளர் படுகொலை!

By காமதேனு

தூத்துக்குடியில் பழிக்கு பலியாக லாரி செட் உரிமையாளர் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அருகேயுள்ள சங்கரப்பேரி சாலையில் சோழன் லாரி புக்கிங் ஆபீஸ் வைத்து நடத்தி வந்தவர் சக்திவேல் (53). இவர் நேற்று மாலை தனது அலுவலகத்துக்கு வெளியே நாற்காலி போட்டு அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அவர் மீது வெடிகுண்டு வீசியது. அதில் நிலைகுலைந்த அவரை அரிவாளால் வெட்டி அந்த கும்பல் படுகொலை செய்துள்ளது.

சக்திவேல்

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், நகர துணை கண்காணிப்பாளர் சத்யராஜ், ஊரக துணை கண்காணிப்பாளர் சுரேஷ், ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அவர்களின் விசாரணையில் இந்த கொலை பழிக்கு பழியாக நடந்திருப்பது கண்டறியப்பட்டது.

தூத்துக்குடி சங்கரப்பேரி பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் கடந்த ஜனவரி 28 ம் தேதி பத்துக்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பலால் அவரது வீட்டில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதில் சக்திவேலுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதையடுத்து அந்த கொலைக்கு பழிவாங்கும் வகையில் கருப்பசாமியின் ஆதரவாளர்கள் சக்திவேலுவை கொலை செய்துள்ளனர்.

அதையடுத்து இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சிப்காட் போலீஸார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியில் பழிக்கு பலியாக லாரி செட் உரிமையாளர் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE