‘சிசேரியன் செய்கையில் மனைவியின் வயிற்றில் துணியை வைத்துவிட்டனர்’ - மருத்துவர் மீது கணவர் புகார் 

By KU BUREAU

மகாராஷ்டிரா: லத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிசேரியன் செய்யப்பட்டபோது, ​​​​தனது மனைவியின் வயிற்றில் துணியை வைத்து தைத்துவிட்டதாக கணவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து சுகாதார அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

ஹபீபா வாசிம் ஜெவாலே என்பவர் தனது புகாரில், 'ஏப்ரல் மாதம் அவுசா பகுதியில் உள்ள மருத்துவமனையில் தனது மனைவிக்கு சிசேரியன் செய்யப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருப்பினும், மூன்று வாரங்களுக்குப் பிறகு அவர் தொடர் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குச் சென்றோம். இதனையடுத்து என் மனைவியை லத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் 20 நாட்கள் சிகிச்சை பெற்றார்.

சுமார் நான்கு மாதங்கள் வயிற்று வலியால் துடித்த அவரை, சமீபத்தில் தாராஷிவ் மாவட்டத்தின் ஓமர்கா நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு ஸ்கேன் செய்ததில் அவரது வயிற்றில் துணி துண்டு இருப்பது தெரியவந்தது’ என்று அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து சிசேரியன் பிரசவம் செய்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவுசா சிவில் மருத்துவமனையின் பொறுப்பாளர் டாக்டர் சுனிதா பாட்டீலிடம் ஜெவாலே புகார் அளித்தார்.

இந்த விவகாரம் மூத்த சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஜெவாலின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், சம்பவம் தொடர்பாக மருத்துவர் மற்றும் செவிலியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று மருத்துவமனையின் பொறுப்பாளர் டாக்டர் சுனிதா பாட்டீல் தெரிவித்தார்.

மாவட்ட சிவில் சர்ஜன் டாக்டர் பிரதீப் தேலே கூறுகையில், “ இதுகுறித்து ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் அனைத்து அறிக்கைகளையும் சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மருத்துவர்களின் அறிக்கைகளையும் நாங்கள் சரிபார்ப்போம்" என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE