பொத்தேரியில் 1 டன் அளவில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

By பெ.ஜேம்ஸ் குமார்

பொத்தேரி: செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் பல இடங்களில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பாலிதீன் பை, பிளாஸ்டிக் கப் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல கடைகளில் மறைமுகமாக பதுக்கி வைத்து பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்கின்றனர். அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் தடையை மீறி பரவலாக பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நடந்து வருகிறது.

பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். ஆனாலும் பதுக்கி விற்பனை செய்வது தொடர்கின்றது. இந்நிலையில் மறைமலை நகர் நகராட்சி, பொத்தேரி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து நகராட்சி நகர்நல பிரிவினர் அந்த பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் இன்று சோதனை நடத்தினர்.

அப்போது, அந்தக் குடோனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 1 டன் அளவிலான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் அதன் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இது குறித்து நகராட்சி நகர் நல பிரிவினர் கூறுகையில்,"திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஓவன் பிளாஸ்டிக் பைகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை என்பதால் அதனை பொதுமக்கள் யாரும் வாங்கி பயன்படுத்த வேண்டாம். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பதுக்கி வைத்தாலோ விற்பனை செய்தாலோ அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை துகள்களாக்கி, சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம்" என்று நகர்நில பிரிவினர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE