நெல்லை அருகே சோகம்: பள்ளி மாணவர்கள் 3 பேர் கடலில் மூழ்கி பலியான பரிதாபம்!

By காமதேனு

உவரி அருகே கடலில் குளித்த மூன்று பள்ளி மாணவர்கள் அலையில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள நவ்வலடி ரைஸ்மில் தெருவைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து மகன் ராகுல் (14). அதே பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் முகேஷ் (13), ரேஷன் கடை தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ஆகாஷ் (14).

இதில் ராகுலும், ஆகாஷீம் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பும், முகேஷ் 8-ம் வகுப்பு படித்து வந்தனர். நண்பர்களான இவர்கள் மூவரும் நவ்வலடி கடலில் நேற்று குளிக்கச் சென்றனர். இதன் பின் நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் மாணவர்களின் பெற்றோர் பதற்றம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் உறவினர்களின் உதவியுடன் அந்த பகுதியில் தேடி பார்த்தனர்.

அப்போது நவ்வலடி கடற்கரையில் மூன்று மாணவர்கள் அணிந்திருந்த உடைகள், செருப்புகள் மட்டும் கிடந்தன. இதுகுறித்து விசாரித்த போது மூன்று மாணவர்களுடன் சேர்ந்து கடலில் குளித்த மாணவர், அவர்கள் கடல் அலையில் சிக்கியதைப் பார்த்து பயந்து தப்பித்து வீட்டுக்கு வந்து விட்டதாக கூறினார். இதையடுத்து காணாமல் போன மாணவர்களின் குடும்பத்தினர் உவரி கடலோர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன் பேரில் போலீஸார், காணாமல் போன மாணவர்களைக் கடலில் தேடினர். தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியைத் துரிதப்படுத்துமாறு வலியுறுத்தினார். மூன்று மாணவர்கள் காணாமல் போன செய்தி பரவியதால நவ்வலடி கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், கடலில் மூழ்கிய ராகுல், முகேஷ், ஆகாஷ் ஆகியோரின் உடல்கள் இன்று கரை ஒதுங்கியது. இதைப் பார்த்து மாணவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE