பிரபல ஓவியர் சையத் ஹைதர் ராசாவின் ரூ.2.5 கோடி மதிப்புள்ள ஓவியம் திருட்டு: மும்பையில் அதிர்ச்சி

By KU BUREAU

மகாராஷ்டிரா: தெற்கு மும்பையில் உள்ள ஒரு ஏல கிடங்கில் இருந்து பிரபல ஓவியர் சையத் ஹைதர் ராசாவின் ரூ.2.5 கோடி மதிப்புள்ள ஓவியம் திருடப்பட்டுள்ளது.

பிரபல ஓவியர் சையத் ஹைதர் ராசாவால் 1992 ஆம் ஆண்டு வரையப்பட்ட பிரகிருதி (இயற்கை) என்று பெயரிடப்பட்ட இந்த ஓவியம், அஸ்தகுரு ஏல இல்லம் பிரைவேட் லிமிடெட்டின் கிடங்கில் இருந்து திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது எம்ஆர்ஏ மார்க் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை பிரான்சில் வாழ்ந்து பணிபுரிந்த ஓவியர் சையத் ஹைதர் ராசா, 2016ல் தனது 94 வயதில் இறந்தார். திருடுபோன இந்த ஓவியம் கடைசியாக மார்ச் 2022 இல் காணப்பட்டது. கிடங்கில் ஓவியம் காணப்படாததால், ஏல மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சித்தாந்த் ஷெட்டி, எம்ஆர்ஏ மார்க் போலீசில் புகார் அளித்தார்.

"ஓவியத்தை மீட்க நாங்கள் ஒரு குழுவை அமைத்துள்ளோம். சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளியை அடையாளம் காண முயற்சிக்கிறோம்," என்று காவல்நிலைய அதிகாரி கூறினார்.

புகாரின்படி, ‘இந்த ஓவியம் 2020ல் ஏலத்தில் அதன் உரிமையாளர் இந்திரா வீரால் ஏல நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்த ஓவியம் கடைசியாக மார்ச் 2022 இல் காணப்பட்டது. இந்த ஆண்டு ஓவியத்தின் உரிமையாளர் அதை ஏலத்தில் வைக்குமாறு அதிகாரிகளிடம் தெரிவித்தார். ஆனால் கிட்டத்தட்ட 1,500 கலைப்படைப்புகளில் இருந்து தேடலுக்குப் பிறகு அந்த ஓவியம் கிடங்கில் காணப்படவில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அடையாளம் தெரியாத நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 380 (திருட்டு) கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE