குளிர்பானத்தில் மயக்க மருந்து! வீடியோ எடுத்து பலமுறை பலாத்காரம்; இளம்பெண் புகாரில் எய்ம்ஸ் மருத்துவர் கைது

By காமதேனு

25 வயது இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த புகாரில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் உள்ளிருப்பு மருத்துவர் (ஆர்எம்ஓ) கைது செய்யப்பட்டார்.

இளம்பெண் பலாத்காரம்

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், போலீஸில் அளித்த புகாரில், 'ஹரியாணா மாநிலம், மகேந்திரகர் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது டெல்லி எய்ம்ஸ் மருத்துவரின் குடும்பத்தினரும், எனது குடும்பத்தினரும் கடந்த மார்ச் மாதம் சந்தித்து திருமண பேச்சுவார்த்தை நடத்தினோம். ஏப்ரல் 2ல் எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்தத்தின்போதே ரூ.5 லட்சம் வரதட்சணை அளித்தோம். ஆனால் மருத்துவரின் குடும்பத்தினர் திருமணத்துக்கு முன்பாக மேலும் ரூ.25 லட்சமும், ஒரு ஸ்கார்பியோ காரும் வழங்க வேண்டும் என வற்புறுத்தினர். மேலும், பிஹெச்டி தேர்வுக்கு தயாராகி வருவதால் டிசம்பர் மாதத்துக்கு பின் திருமணம் செய்து கொள்ளலாம் என அந்த மருத்துவர் வலியுறுத்தினார்.

பலமுறை மிரட்டி பலாத்காரம்

கடந்த மே 24ல் எனது குடும்பத்தினர் வீட்டில் இல்லை என மருத்துவரிடம் தெரிவித்தேன். அப்போது அவரும், அவரது சகோதரரும் எனது வீட்டுக்கு வந்தனர். அவர்கள் கொடுத்த குளிர்பானத்தை அருந்தியதும் நான் மயக்கமடைந்தேன். மயக்கம் தெளிந்து எழுந்தபோது எனது ஆடைகள் களைக்கப்பட்டு கிடந்தன. மேலும் மருத்துவரின் சகோதரர் என்னை வீடியோ எடுத்து வைத்துள்ளார். அந்த வீடியோ, புகைப்படங்களை வைத்து மிரட்டி, எய்ம்ஸ் விடுதிக்கு வரவழைத்து பலமுறை பலாத்காரம் செய்தனர். இதனால் நான் கர்ப்பமடைந்தேன். எனக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தபோது காய்ச்சல் மாத்திரை என கூறி கருகலைப்பு மாத்திரையை கொடுத்துவிட்டார்' என குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரின்பேரில் வரதட்சணை கொடுமை, பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட மருத்துவரை கைது செய்துள்ளதாக கவிநகர் காவல் உதவி ஆணையர் அபிஷேக் ஶ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவரின் குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE