பகீர்... துண்டு துண்டாக வெட்டி வாலிபர் படுகொலை: சென்னையில் ரவுடிகள் 2 பேர் கைது!

By காமதேனு

சென்னையில் கஞ்சா விற்பனை மற்றும் முன்விரோதம் காரணமாக வாலிபரை காரில் கடத்திச் சென்று துண்டு துண்டாக வெட்டிப் படுகொலை செய்த ரவுடிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடத்தல்

சென்னை பூந்தமல்லி அடுத்து நாசரேத்பேட்டை ஆறுமுகம் தெருவைச் சேர்ந்தவர் கருக்கா என்ற ஸ்டீபன்( 23 ). இவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் எலக்ட்ரிகல் கடையில் உதவியாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு கருக்கா ஸ்டீபன் வீட்டின் அருகே நடந்து சென்ற போது காரில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவரை காரில் கடத்த முயன்றனர்.

அப்போது கருக்கா ஸ்டீபன் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றார். அப்போது அந்த கும்பல் கத்தியால் அவரை தலையில் வெட்டி பின்னர் காரில் கடத்திச் சென்றது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது அண்ணன் ஜஸ்டின், உடனே காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதன் பேரில் நாசரேத் பேட்டை போலீஸார் கருக்கா ஸ்டீபனை கடத்திச் சென்ற கார் எண்ணை வைத்து அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் கருக்கா ஸ்டீபன் கடத்தல் குறித்து அனைத்து காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார் படுத்தப்பட்டனர்.

இதற்கிடையே கடத்தல் கும்பல், மாங்காடு மலையம்பாக்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள காலி மைதானத்தில் வைத்து கருக்கா ஸ்டீபனை கத்தியால் கழுத்து, கை, கால்களைத் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்தனர்.

இந்நிலையில் மாங்காடு போலீஸார் மலையம்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள காலி மைதானத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் கார் ஒன்று நிற்பதைப் பார்த்து அங்கு விரைந்து சென்றனர். அவர்களைப் பார்த்த கடத்தல் கும்பல் காரை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடியது. ஆனால், போலீஸார் விரட்டி சென்று இருவரை கைது செய்து காரை சோதனை செய்தனர்.

அப்போது காரில் கருக்கா ஸ்டீபன் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. பின்னர் போலீஸார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் கைது செய்யப்பட்ட இருவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் மாங்காடு மலையம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஈராக்(19), விக்னேஷ் (19) என்பது தெரிய வந்தது. கடந்த 6 மாதங்களுக்கு கருக்கா ஸ்டீபன் செல்போனை மலையம்பாக்கத்தைச் சேர்ந்த பிரவீன் பறித்துச் சென்றுள்ளார். இதனால் கடந்த மாதம் ஸ்டீபன் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரவீனை அடித்து கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதில் காயமடைந்த பிரவீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அவர் அளித்த புகாரில் ஸ்டீபன் நண்பர்களாக தருனேஷ்வரன், சதீஷ், நிதீஷ் ஆகிய மூன்று பேரை நாசரேத்பேட்டை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் ஈஷாக்கிற்கும், ஸ்டீபனுக்கும் இடையே கஞ்சா விற்பனை செய்வது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரவீனை கொலை செய்ய முயன்ற கருக்கா ஸ்டீபனை கொலை செய்ய ஈஷாக் திட்டம் தீட்டியள்ளார்.

அதன்படி நேற்று இரவு ஈஷாக் தனது நண்பர்களான மாங்காடு மலையம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (19), தனுஷ், காட்டு பூச்சி என்ற லோகேஷ், ஜான், அன்பரசு ஆகியோருடன் சேர்ந்து கருக்கா ஸ்டீபனை காரில் கடத்திச் சென்று துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.‌

இதனையடுத்து நாசரேத்பேட்டை போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து ஈஷாக், விக்னேஷ் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய காரின் ஓட்டுநர் உதயகுமார் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.‌ மேலும் தலைமறைவாக உள்ள லோகேஷ்,ஜான் உள்ளிட்ட மேலும் சிலரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE