‘நியோ மேக்ஸ்’ மோசடியில் மேலும் ஒர் இயக்குநர் கைது

By என்.சன்னாசி

மதுரை: ‘நியோ மேக்ஸ்’ ரியல் எஸ்டேட் நிறுவன மோசடி வழக்கில் மேலும் ஓர் இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

"நியோமேக்ஸ்" ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோரிடம் முதலீடு செய்திருந்தனர். உரிய நேரத்தில் முதலீட்டாளர்கள் பணம் வழங்காமல் ஏமாற்றியதாக அந்நிறுவனங்களுக்கு எதிராக புகார்கள் எழுந்தன. இது குறித்து பாதிக்கப்பட்டோர் கொடுத்த புகாரின் பேரில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

‘நியோமேக்ஸ்’ நிறுவனங்களுக்கு எதிரான புகார்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, மதுரையில் சிறப்பு டிஎஸ்பி மணிஷா தலைமையில் போலீஸார் விசாரிக்கின்றனர். ஏற்கெனவே 37-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிறுவனங்களுக்கு சொந்தமான கோடிக்கணக்கான சொத்துக்களும் தொடர்ந்து பறிமுதல் செய்யப்படுகின்றன. வழக்கில் தொடர்புடையவர்களை தனிப்படையினர் தொடர்ந்து தேடுகின்றனர்.

சிவகங்கையைச் சேர்ந்த தாஸ் என்பவரின் மகன் மகாலிங்கம் என்பவரை கடந்த 6ம் தேதி டிஎஸ்பி மணிஷா தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, நியோகோ டெவலப்பர்ஸ் நிறுவன இயக்குநர் மதுரை ஒத்தக்கடை சரவணக்குமார் (48) என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் 25 நபர்களிடம் சுமார் ரூ.10 கோடி வசூலித்து மோசடி செய்தது தொடர்பாக விசாரித்துள்ளனர். இவ்வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் நபர்களை தேடுகிறோம் என டிஎஸ்பி மணிஷா கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE