ஆட்சிக்கு ஆபத்தா... கலங்கும் உடன்பிறப்புகள்... தஞ்சை பெரியகோயில் அகழியில் பயங்கர தீ விபத்து!

By காமதேனு

தஞ்சாவூர் பெரிய கோயிலில் முறையான பராமரிப்பு இல்லை என்று பல காலங்களாகவே சுற்றுலா பயணிகளிடையே அதிருப்தி நிலவி வரும் நிலையில், இன்று தஞ்சாவூர் பெரிய கோயிலின் அகழியில் தீ விபத்து ஏற்பட்டு அகழியில் சேர்ந்திருந்த குப்பைகளும் பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழரின் கட்டுமான கலைக்கு அடையாளமாக இந்த கோயில் திகழ்ந்து வருகிறது. இங்குள்ள தஞ்சை பெருவுடையாரை தரிசிக்க மாநிலம் மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். அதேபோல தஞ்சை பெரிய கோயிலின் கட்டுமானத்தை கண்டு ரசிப்பதற்காக வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இன்றளவிலும் அதிசய பொக்கிஷமாக, கம்பீரமாக ஓங்கி நிற்கிறது தஞ்சை பெரிய கோயில்.

தஞ்சை பெரிய கோயிலை சுற்றிலும் சுமார் 4.5 கிலோமீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்டமான அகழி அமைக்கப்பட்டுள்ளது. இந்த அகழி கடந்த சில ஆண்டுகளாகவே உரிய பராமரிப்பின்றி கிடந்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு, தஞ்சை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு, 900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் 180 கோடி ரூபாய் தஞ்சை பெரிய கோயிலின் அகழியை தூர்வாரி பராமரிக்க ஒதுக்கப்பட்டது. மேலும் தஞ்சை பெரிய கோயிலின் பின்புறம் உள்ள கல்லணையிலிருந்து தண்ணீரை எடுத்து அகழியில் விடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. வருடத்தின் 6 மாதங்கள் தண்ணீர் தேங்கி இருக்கும் வகையில் அகழியை மேம்படுத்தவும், அகழியில் படகு போக்குவரத்து விடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.

தஞ்சை பெரிய கோயில் அகழியில் பயங்கர தீவிபத்து

இருப்பினும் திட்டம் அறிவிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் அகழியில் மேம்பாட்டு பணிகள் துவக்கப்படவில்லை. கோயிலை சுற்றிலும் உள்ள அகழியை ஒட்டியுள்ள கோயிலின் சுற்றுச்சுவர்கள் சிதிலமடைந்திருந்ததால், ஆங்காங்கே சீரமைக்கப்பட்டது. இருப்பினும் அகழி முழுவதும் புதர்கள் மண்டி, குப்பைகள் கொட்டும் இடமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை பெரிய கோயில் சோழன் சிலை பின்புறம் அகழியில் தீப்பற்றி எரிந்தது.

அகழியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தஞ்சை மாநகராட்சி பணியாளர்கள்

இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், தஞ்சை மாநகராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த தீ விபத்து காரணமாக சுற்றுச்சுவர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது.

தமிழகத்தில் அரசியல் மாற்றங்களில் தஞ்சை பெரிய கோயில் பெரும் பங்கு வகிப்பதாக பல ஆண்டுகளாகவே கருத்து நிலவி வருகிறது. விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தஞ்சை பெரிய கோயிலில் ஏற்பட்டுள்ள தீ விபத்து அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமோ என்று உடன்பிறப்புகள் கலக்கத்தில் இருப்பதாக தஞ்சை பகுதியில் பரபரப்பு கிளம்பியிருக்கிறது. நாளை மகாசிவராத்திரி விழா நடைப்பெற உள்ள நிலையில், பெரிய கோயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது கலக்கத்தை ஏற்படுத்துவதாக அந்த பகுதி மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

ரயில்வே துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு... 9,000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

ராணுவக் கல்லூரியில் படிக்க விருப்பமா?... மாணவர்கள் ஏப்.15 வரை விண்ணப்பிக்கலாம்!

பள்ளியில் பாடம் நடத்தும் ரோபோ ஆசிரியை... அசத்தும் ஏ.ஐ தொழில்நுட்பம்!

ராமேஸ்வரம் கஃபே வழக்கில் பரபரப்பு... குண்டு வைத்தவர் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்?

அண்ணாமலையை பதவியில் இருந்து தூக்கத் தயார்... டீல் பேசிய பாஜக: புறக்கணித்த எடப்பாடி பழனிசாமி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE