குள்ளநரி தாக்கியதில் 2 பேர் படுகாயம்; மத்தியப் பிரதேசத்தில் தொடரும் பயங்கரம்

By KU BUREAU

போபால்: மத்தியப் பிரதேசம் குள்ளநரிகளின் அட்டகாசத்தில் சிக்கித் தவிக்கிறது. செஹோர் மாவட்டத்தில் நேற்று மாலை இரண்டு பேர், குள்ளநரியால் தாக்கப்பட்டு காயமடைந்தனர். இந்த திகிலூட்டும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

செஹோர் மாவட்டம் ரெஹ்தி தெஹ்சிலில் உள்ள சகோனியா பஞ்சாயத்தில் நேற்று மாலை சாலையோரத்தில் அமர்ந்திருந்த இரண்டு நபர்களின் மீது குள்ளநரி திடீரென பாய்ந்து தாக்கியுள்ளது. அவர்கள் குள்ளநரி மீது கற்களை எறிந்து விரட்ட முயன்றனர், ஆனால் மறுபடியும் குள்ளநரி தொடர்ந்து தாக்கியுள்ளது. அப்போது அவர்களில் ஒருவர் குள்ளநரியை பிடித்து சுமார் 15 அடி தூரம் வீசியுள்ளார்.

இதனையடுத்து காயமடைந்த ஷியாம் யாதவ் மற்றும் நர்மதா பிரசாத் ஆகிய இருவரும் நர்மதாபுரம் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்பகுதி பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், தனியாக வெளியே செல்வதைத் தவிர்க்கவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து கிராம பஞ்சாயத்து உதவி செயலாளர் ராமகிருஷ்ணா உய்கே கூறுகையில், "கிராம மக்கள் குள்ளநரிகளிடம் சிக்காமல் இருக்க குழுக்களாக பயணம் செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளோம். வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஞ்சர் ஹரிஷ் மகேஸ்வரி காயமடைந்தவர்களை பார்வையிட்டு இழப்பீடு வழங்கினார்" என்றார்.

சமீபகாலமாக குள்ளநரிகளின் தாக்குதல்களால் மத்திய பிரதேசத்தின் செஹேர் மாவட்ட கிராம மக்கள் பரிதவித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள அடர்ந்த காட்டில் குள்ளநரி மறைந்திருந்து தாக்கி வருகிறது. இதேபோல நேற்று நடந்த மற்றொரு சம்பவத்தில், சல்கான்பூரில் ஒரு குள்ளநரி ஐந்து பேரைத் தாக்கியது. இதில் இரண்டு பேர் பலத்த காயம் அடைந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE