மணிப்பூரில் மீண்டும் வன்முறை: மூன்று மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு

By KU BUREAU

இம்பால்: மணிப்பூரில் மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள காரணத்தால் மூன்று மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் சமீபத்திய வன்முறை சம்பவங்கள் மற்றும் போராட்டங்கள் காரணமாக மீண்டும் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த தீவிர வன்முறையின் காரணமாக, இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு மற்றும் தௌபால் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு மாவட்ட நீதிபதிகள் அந்தந்த மாவட்டங்களில் காலை 5 மணி முதல் காலை 10 மணி வரை ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதாக அறிவித்தனர். ஆனால், மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமமடைந்துள்ளதன் காரணமாக, ஊரடங்கு தளர்வு உத்தரவு இன்று காலை 11 மணி முதல் ரத்து செய்யப்பட்டு, ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்பட்டது. ஆனால், ஊடகங்கள், மின்சாரம், நீதிமன்றம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு ஊரடங்குச் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் கடந்த சில நாட்களாக மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள மொய்ராங்கில் செப்டம்பர் 6ம் தேதி ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் தாக்குதல் நடந்தது. இதன் விளைவாக மணிப்பூரின் முதல் முதல்வர் மைரெம்பம் கொய்ரெங் சிங்கின் வீட்டில் பூஜை செய்து கொண்டிருந்த ஒருவர் உயிரிழந்தார்.

செப்டம்பர் 7 ஆம் தேதி மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நீண்ட தூர ராக்கெட்டுகள் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இதை குக்கி தீவிரவாதிகள் வீசியதாக சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டன. மேலும், ஒருவரின் வீட்டிற்குள் தீவிரவாதிகள் நுழைந்து சுட்டுக் கொன்ற சம்பவமும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக இப்பகுதிகளில் ரோந்து மற்றும் வான்வழி ஆய்வு நடத்துவதற்காக ராணுவ ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டது. இப்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெனரல் கே கபீப் கூறினார்.

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் இம்பால் பள்ளத்தாக்கில் மேதி மற்றும் குக்கி இனக்குழுக்களுக்கு இடையே நடந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE