இன்றைய சமூக சூழலை நினைத்து மனசு பதறுது... நடிகர் ராஜ்கிரண் உருக்கம்!

By காமதேனு

’’நான் படிக்கும் போது எல்லா சாதிகளைச் சார்ந்த மாணவர்களும் ஒன்றாகத் தான் படித்தோம். யாரும் எவ்வித பேதமும் பார்த்ததில்லை. ஆனால் இன்றைய மாணவர்களையும், சமூக சூழலையும் நினைத்து மனம் பதறுகிறது’’ என நாங்குநேரி சம்பவம் குறித்து நடிகர் ராஜ்கிரண் உருக்கமாக கூறியுள்ளார்.

ராஜ்கிரண் பேஸ்புக் பதிவு

நாங்குநேரி சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் தங்களது கண்டனத்தையும், ஆதங்கத்தையும் சமூக வலைதளங்கள் வாயிலாக பதிவிட்டு வருகின்ற நிலையில், நடிகர் ராஜ்கிரண் இந்த சம்பவம் தொடர்பாக, ‘’நான் பள்ளியில் படித்த காலங்களில், இந்து, இஸ்லாம், கிருஸ்துவம், போன்று எல்லா மதங்களைச் சார்ந்த மாணவர்களும், பள்ளர், பறையர், தேவர், அருந்ததியர், நாடார், செட்டியார், பிள்ளைமார் போன்று எல்லா சாதிகளைச் சார்ந்த மாணவர்களும் ஒன்றாகத்தான் படித்தோம். யாரும் எவ்வித பேதமும் பார்த்ததில்லை. ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக, ஒரே தாய் பிள்ளைகளைப் போலத்தான் படித்தோம்.

எங்களுக்கு கற்றுத் தந்த ஆசிரியர்களும் எல்லா சாதி மதமும் கலந்து தான் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் எவ்வித பேதமும் பார்க்காமல், எல்லா மாணவர்களையும் தங்களின் சொந்தப் பிள்ளைகள் போல், அன்புடனும் அக்கறையுடனும் பயிற்றுவித்தார்கள்.

இன்று, மாணவர்கள் மற்றும் சமூக சூழலை நினைத்து மனம் பதறுகிறது. இப்படியான சூழல் எப்படி உருவானது ? அந்த காலம் போல் இந்த காலமும் மாறி விடாதா இறைவா என்று, ஆதங்கப்பட மட்டுமே முடிகிறது... நாங்குநேரி அவலம்..." என குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE