ரூ.3.50 கோடி மோசடி... நகைக்கடை உரிமையாளர் மனைவி, மகன் கைது!

By காமதேனு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தங்க நகை மொத்த வியாபாரிகள் போல் நடித்து பலரிடம் மூன்றரை கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த நகைக்கடை உரிமையாளரின் மனைவி, மகனை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நகை மாளிகை மற்றும் தங்க நகை தயாரிப்பகம் நடத்தி வந்தவர் முருகபாண்டி. இவர் மதுரையைச் சேர்ந்த தங்க நகை மொத்த வியாபாரியான வீர மணிகண்டன் (30) என்பவரிடம் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் சில்லறை விற்பனைக்காக 16 லட்சத்து 72 ஆயிரத்து 820 ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை பெற்றுள்ளார். அதே போன்று ஆண்டிபட்டி அரசுப் பள்ளி ஆசிரியரான பிரபு என்பவரிடம் 25சவரன் தங்க நகைகள் புதிதாக செய்து தருவதாக கூறி 18 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். ஆனால் பேசியபடி நகைக்கான பணத்தை தராமலும், வாடிக்கையாளரிடம் பெற்ற பணத்திற்கு புதிய தங்க நகைகளைச் செய்து தராமலும் காலம் தாழ்த்தி வந்த நிலையில், முருகபாண்டி கடந்த மே மாதம் தலைமறைவானார்.

முருகபாண்டி

இதனால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வீரமணிகண்டன் மற்றும் பிரபு ஆகியோர் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், முருகபாண்டி வீர மணிகண்டன், பிரபுவை போல், மொத்த வியாபாரிகளான அய்யப்பன், அசோக்குமார், சுரேஷ்குமார், கார்த்திக், கனகராஜ் ஆகியோர்களிடமும் முருகபாண்டி தங்க நகை மொத்த விற்பனையில் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் என பலரிடம் 3.41 கோடி ரூபாய் வரை அவர் மோசடி செய்து விட்டு தலைமறைவானார். இதனையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை கடந்த ஜூன் 18ம் தேதி கைது செய்த தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், வாடிக்கையாளர்களிடம் புதிய தங்க நகைகளுக்கான ஆர்டர்களை பெறுவது, அதற்கான பணத்தை முருகபாண்டியிடம் வழங்கியது என மோசடிக்கு உடந்தையாக அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து சென்னையில் தலைமறைவாக இருந்த முருகபாண்டியின் மனைவி சாந்தி(41) மகன் வீர விக்னேஷ் (23) ஆகிய இருவரை கைது செய்த தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE