நகையை அபகரிக்க தனிமையில் வாழ்ந்து வந்த மூதாட்டியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் அருகேயுள்ள வேடர் புளியங்குளம் பகுதியை சேர்ந்தவர் முத்துப்பிள்ளை (66). மூதாட்டியான இவருக்கு திருமணமாகவில்லை. இதனால் திருநகர் பகுதியில் சாலையோரங்களில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு திருநகர் மூன்றாவது பஸ் நிறுத்தம் அருகே சாலை ஓரமாக உறங்கியுள்ளார்.
இன்று காலையில் பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் முத்துப்பிள்ளை இறந்து கிடந்தார். அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன. இதுதொடர்பாக அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த திருநகர் போலீஸார் முத்துப்பிள்ளையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீஸார், முதற்கட்டமாக அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தனர். அப்போது அதில், இளைஞர் ஒருவர் மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது. பதிவான விவரங்களை அடிப்படையாக கொண்டு போலீஸார் அடுத்தக்கட்ட விசாரணை செய்த போது தனக்கன்குளத்தைச் சேர்ந்த அலெக்ஸ் (32) என்பவர் சிக்கினார்.
விசாரணையில், இந்த கொலையைத் தான் செய்ததாகவும், மூதாட்டியிடம் இருந்த நகையைத் திருடுவதற்காக அவரை நோட்டமிட்டு இரவில் தூங்கிக்கொண்டு இருந்தபோது அவரது தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ததாகவும் அலெக்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து திருநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அலெக்ஸை கைது செய்தனர். இவர் மீது இருசக்கர வாகனங்கள் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.