காரைக்குடியில் முன்னாள் அதிமுக வட்ட செயலாளர் வீட்டினுள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஜீவா நகர் முதல் வீதியில் வசித்து வருபவர் பழனிமுருகன். மீன் வியாபாரம் செய்து வரும் இவர் காரைக்குடி 4 வது வார்டு வட்ட அதிமுக செயலாளராகவும் இருந்துள்ளார்.
பழனிமுருகன் நேற்று கோயிலுக்கு சென்ற நிலையில் வீட்டில் அவரது மகன் ஹரி குடும்பத்துடன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் பழனிமுருகனின் வீட்டினுள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.
அந்த பெட்ரோல் குண்டுகள் தரையில் பட்டு வெடித்ததால் அங்கு பெரிய அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை. இந்நிலையில் பெட்ரோல் குண்டு வெடித்த சத்தத்தை கேட்ட ஹரி வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்துள்ளார். இதையடுத்து பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காரைக்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெட்ரோல் குண்டு வீசியவர்கள் குறித்தும், அதற்காண காரணம் குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.