காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செங்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான தெர்மால்கோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு தெர்மாகோல் மூலம் டிரே, மீன் பெட்டி, காய்கறி பெட்டிகள், குளிர்சாதன பெட்டி மற்றும் வாஷிங் மெஷின் போன்றவற்றிற்கு தேவைப்படும் தெர்மாகோல்கள் தயாரிக்கப்பட்டு பல்வேறு தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வரப்படுகிறது.
இந்த தொழிற்சாலையில் 24 மணி நேரமும் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் இன்று காலை திடீரென கரும்பு புகை வெளியேறி தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனைக் கண்ட பணியில் இருந்த ஊழியர்கள் சுதாரித்துக் கொண்டு உடனடியாக ஆலையில் இருந்து வெளியேறினர். பின்னர் சம்பவம் குறித்து தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினர்.
தொழிற்சாலை முழுவதும் ரசாயனம் கலந்த தெர்மாகோல், பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் எரிந்து வருவதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து புகை மண்டலமாக காட்சியளித்ததோடு தீயை காட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு படை வீரர்களுக்கும் சற்று தொய்வு ஏற்பட்டது. மேலும் அருகில் வசிக்கக்கூடிய பொதுமக்களுக்கும் சுவாச கோளாறு போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டது. பின்னர் கூடுதலாக திருவள்ளூர், பேரம்பாக்கம், மற்றும் தனியார் ஆலைகளில் இருந்து கூடுதலாக மூன்று தீயணைப்பு வாகனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் நிகழ்வு இடத்திற்கு வந்த 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டு கிடங்கில் சேமித்து வைத்திருந்த பல லட்சம் மதிப்பிலான தெர்மாகோல், பிளாஸ்டிக் போன்ற பொருள்கள் சேதம் அடைந்தன. இந்த விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டதா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.