அடேயப்பா, 11.5 கோடி ரூபாய், 120 கோடி ஆவணங்கள் பறிமுதல்... அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி!

By காமதேனு

பெங்களூருவில் 8 இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையில் 11.5 கோடி ரூபாய் ரொக்கம், 120 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அமலாக்கத்துறை

பணமோசடி மற்றும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான சில தகவல்களை அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் கடந்த பிப்ரவரி மாதம் பெற்றனர். இதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 29-ம் தேதி சில இடங்களில் ஆய்வு செய்தனர். அன்றைய தினம் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக பெங்களூருவில் 8 இடங்களில் அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். விஜய் டாடா அசோசியேட்ஸ், ஆர்.எஸ்.சந்திரசேகர், முனிராஜு, கே. டி.நாகேந்திரபாபு, மஞ்சுநாத் ஆகியோருக்கு சொந்தமான நிறுவனங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்களின் கணக்கில் இருந்து சுமார் 11.25 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. அதுமட்டுமின்றி, 120 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ரியல் எஸ்டேட் துறையில் பணிபுரிந்து வரும் இந்த நிறுவனங்கள், இடம் கொடுத்து ஏமாற்றியதாக பெங்களூரு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இடம் வழங்குவதில் மோசடி செய்ததற்காக, 2004-ம் ஆண்டு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாளர்களின் நலன் பாதுகாப்புச் சட்டம், 2004-கேபிஐடிஎஃப்இயின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

மக்களிடம் இருந்து பெற்ற பணத்தை வேறு இடங்களில் முதலீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் இருந்து சுமார் ரூ.250 கோடி பெறப்பட்டது. அந்த பணத்தை மக்கள் திருப்பி கேட்டால் மிரட்டப் பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரங்கள் அமலாக்க இயக்குநரகத்தின் கவனத்திற்கு வந்ததையடுத்து, அவர்கள் இந்த சோதனையை நடத்தியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE