உணவு தீர்ந்து விட்டது: சென்னை இராமாபுரத்தில் ஓட்டல் உரிமையாளரை தாக்கிய 3 பேர் கைது!

By KU BUREAU

சென்னை: இராமாபுரம் அருகே ஓட்டல் உரிமையாளரிடம் தகராறு செய்து தாக்குதலில் ஈடுபட்ட மூவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: "சென்னை இராமாபுரம் கூத்தப்பேடு மெயின் ரோட்டில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவர் அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த செப்டம்பர் 7ம் தேதி அன்று இரவு இவர் ஓட்டலில் இருந்த போது அங்கு வந்த சிலர் சாப்பிடுவதற்கு உணவு உள்ளதா என கேட்டுள்ளனர். அப்போது, உணவுகள் அனைத்தும் தீர்ந்து விட்டது என செந்தில்குமார் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அக்கும்பல் செந்தில் குமாரை மிரட்டியது மட்டுமின்றி, அங்கிருந்த அவரது மகன் மோகன் பிரபுவை கற்கள் மற்றும் கட்டையால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் காயமடைந்த மோகன் பிரபு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் இராமாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இராமாபுரம் காவல் ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, வழக்கில் சம்பந்தப்பட்ட ஆனந்தன் நகரை சேர்ந்த தீபக், வெங்கடேஸ்வரன் நகரை சேர்ந்த ஆகாஷ், தாங்கல் தெரு, அண்ணா நகரை சேர்ந்த பிரவீன்குமார் ஆகிய மூவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட தீபக் மற்றும் பிரவீன்குமார் மீது ஏற்கனவே தலா ஒரு திருட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது" என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE