நில அபகரிப்பு வழக்கில் சிபிஐ சோதனை: நுங்கம்பாக்கம் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

By துரை விஜயராஜ்

சென்னை: நில அபகரிப்பு வழக்கில் சிபிஐ சோதனைக்குள்ளான நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் ஆனந்த் பாபுவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கு நீலாங்கரையில் 18.25 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தை போலி ஆவணங்கள் மூலம் சிலர் அபகரித்து விட்டதாக, அப்போதைய நீலாங்கரை காவல் ஆய்வாளராக பணியாற்றிய ஆனந்த் பாபுவிடம் புகார் அளித்தார். ஆனால் அவர் நடவடிக்கை எடுக்காமல் நில அபகரிப்பு கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கார்த்திக், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்த வழக்குத் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி 4 மாத காலத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நில மோசடி சம்பவம் நடைபெற்ற போது ஆனந்த் பாபு நீலாங்கரையில் பணியாற்றினார். தற்போது அவர் நுங்கம்பாக்கம் சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

அவர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, சென்னை அண்ணா நகர் காவலர் குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் கடந்த 7ம் தேதி சோதனை நடத்தினர். இந்நிலையில் காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபுவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் விரைவில் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE