திண்டிவனம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை - ரூ 1.08 லட்சம் பறிமுதல்

By எஸ்.நீலவண்ணன்

விழுப்புரம்: திண்டிவனம் சந்தைமேடு பகுதியில் மாவட்ட பதிவாளர் அலுவலகம் மற்றும் திண்டிவனம் சார்பதிவாளர் அலுவலகம் 1,மற்றும் அவரப்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகம் ஆகியவை இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் தொடர்ந்து பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் பத்திரப்பதிவு செய்ய அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகவும் தொடர்ந்து ரகசிய தகவல் வந்தது.

இதை அடுத்து கடந்த மாதம் 22-ம் தேதி டிஎஸ்பி வேல்முருகன் தலைமையில் போலீஸார் திடீரென பத்திர பதிவு அலுவலகம் 1-ல் சோதனை செய்தனர். அப்பொழுது அவர்களை கண்டவுடன் நான்கு பவுன் தங்க நகை மற்றும் ரூ.1.40 லட்சம் பணத்தை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்ற பத்திர பதிவு அலுவலக ஊழியர்கள் மற்றும் ஆவண எழுத்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் பிடிப்பட்டனர். இதையடுத்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் அதே வளாகத்தில் இயங்கி வரும் அவரபாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அடுக்கடுக்கான புகார் வந்ததை அடுத்து இன்று மாலை உள்ளே வந்த டி எஸ் பி வேல்முருகன் தலைமையிலான 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனைமேற்கொண்டனர். இதனை அறிந்த ஊழியர்கள் பொதுமக்கள் மற்றும் ஆவண எழுத்தர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து சார் பதிவாளர் அலுவலகத்தை பூட்டி விசாரணை நடத்தினர். மேலும் அலுவலகத்திற்கு வெளியே இருந்த ஆவண எழுத்தர்கள் தங்களது அலுவலகத்தை மூடிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

மேலும் அங்கு இருக்கும் பத்திரப்பதிவுஅலுவலர்,ஊழியர்கள் மற்றும் ஆவண எழுத்தர்கள், பொதுமக்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் விவசாயி ஒருவர் தனது விவசாய நிலத்தை பத்திரப்பதிவுசெய்வதற்காக ரூ 40 லட்சம் எடுத்து வந்திருந்தார்.

அதை பறிமுதல் செய்து உரிய ஆவணங்கள் இருக்கிறதா என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விவசாயிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ 40 லட்சம் இல்லாமல் மேலும் ரூ 1.08 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நேற்று முன் தினம் அரகண்டநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டு ரூ 70 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE