கோத்தகிரி: கோத்தகரியில் கடன் பிரச்சினையால் ராணுவ வீரர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கொட்டகம்பை பாரதி நகரை சேர்ந்தவர் பிரபாகரன் (32). இவர் கடந்த 2012ம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தில் பணி புரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஷாலினி (24) என்ற மனைவியும், ரிதன்யா (6) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரபாகரன் காஷ்மீரில் பணிபுரிந்த வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளார். மன விரக்தியால் பிரபாகரன் மது குடித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று ஷாலினி தனது மகளை பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். வீட்டில் பிரபாகரன் தனியாக இருந்துள்ளார். பள்ளியிலிருந்து ஷாலினி வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது பிரபாகரன் தூக்கிட்ட நிலையில் கிடைந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஷாலினி சப்தமிட்டதால், அருகில் இருந்தவர்கள் வந்து, பிரபாகரனை மீட்டு, சிகிச்சைக்காக கோத்தகிரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இது குறித்து கோத்தகிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், இறந்த பிரபாகரன், பங்கு சந்தையில் முதலீடு செய்து வந்ததாகவும், அதனால் பல கடன் செயலிகளில் கடன் பெற்றதாகவும், கடன் அதிகமானதால், ஷாலினியின் நகைகளை விற்று மீண்டும் பங்கு சந்தையில் முதலீடு செய்ததாகவும், இந்நிலையில், கடன் பிரச்சினையால் மன விரக்தியில் இருந்தவர், விடுமுறையில் வீட்டுக்கு வந்து தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.
» உதகையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வடமாநில இளைஞருக்கு ஆயுள் தண்டனை
» ஆத்திரத்தில் தாக்கியதில் பெண் உயிரிழப்பு - இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை