3.50 கோடி ரூபாய் மதிப்புள்ள 521 லேப்டாப்புக்களை வாடகைக்கு எடுத்துச் சென்று குறைந்த விலைக்கு விற்று மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை விருகம்பாக்கம் அபுசாலி தெருவை சேர்ந்தவர் பிரேமலதா (40). இவர் Teachleaf systems pvt Ltd என்ற பெயரில் கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இதேபோல் பல்லாவரம் சங்கர் நகரை சேர்ந்த தினேஷ் (27) என்பவரும் லேப்டாப் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தினேஷ் பிரேமலதாவிடம் சென்று 20 லேப்டாப்கள் வாடகைக்கு வேண்டும் என கேட்டு, அதற்குரிய ஒரு குறிப்பிட்ட தொகையை முன்பணமாக செலுத்திவிட்டு 20 லேப்டாப்பை எடுத்துச் சென்றார். அதன்பின்பு தினேஷ் தவறாமல் மாத வாடகை செலுத்தி வந்துள்ளார்.
மீண்டும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரேமலதாவிடம் 521 லேப்டாப்கள் வாடகைக்கு வேண்டும் என கேட்டுள்ளார். மாத வாடகை 27 லட்ச ரூபாய் ஆகும் என பிரேமலதா கூறியுள்ளார். அதற்கு ஒப்புக்கொண்டு தினேஷ் பிரேமலதாவிடம் இருந்து 3.50 கோடி ரூபாய் மதிப்புள்ள 521 லேப்டாப்களை வாடகைக்கு எடுத்துச் சென்றார். முதல் மாதம் வாடகை கொடுத்த நிலையில் அடுத்த மாதம் இவரிடமிருந்து வாடகை ஏதும் வரவில்லை.
இதற்கிடையே பிரேமலதாவிடம் அவரது வாடிக்கையாளர் ஒருவர், குறைந்த விலையில் அனகாபுத்தூரில் ஒரு நபர் லேப்டாப் விற்பனை செய்து வருவதாகவும் தங்களுக்கு தேவைப்பட்டால் சென்று வாங்கி கொள்ளுமாறு முகவரி கொடுத்துள்ளார். மேலும் அந்த வாடிக்கையாளர்கள் தன் வாங்கிக் கொண்டு வந்த லேப்டாப்பை பிரேமலதாவிடம் காண்பித்தபோது அதனைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். அது அவரிடமிருந்து தினேஷ் வாடகைக்கு எடுத்துச்சென்ற லேப்டாப்.
இதனையடுத்து பிரேமலதா இது குறித்து விசாரித்தபோது தினேஷ் தன்னிடமிருந்து வாடகைக்கு எடுத்த 521 லேப்டாப்களை குறைந்த விலைக்கு தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு விற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பிரேமலதா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து தினேஷை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து லேப்டாப்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
சத்தமில்லாமல் நடந்த மகனின் பட பூஜை... கண்டுகொள்ளாத விஜய்!
பகீர் வீடியோ... 40 தொழிலாளர்களின் உயிர் போராட்டம்... மீட்பு பணிகள் நிறுத்தி வைப்பு!
நாளை உலகக் கோப்பை பைனல்... லட்சங்களில் எகிறிய தங்கும் விடுதி வாடகை!