திருத்தணி: திருத்தணியில், தற்காலிக பணி நீக்கம் காரணமாக டாஸ்மாக் மதுபானக் கடை மேற்பார்வையாளர் தூக்கிட்டு தற்கொலை செயது கொண்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, ராஜீவ்காந்தி நகர் ஆதிசங்கர் அவின்யூவை சேர்ந்தவர் அருள்குமார் (44). இவர், பூந்தமல்லி அருகே உள்ள வானகரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 1-ம் தேதி மதுபான கடையில் பணியில் இருந்த அருள்குமார், இரவு உணவு அருந்துவதற்காக அருகில் உள்ள உணவு விடுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது, மதுபான கடையில், உதவி விற்பனையாளரான, கவரப்பேட்டையை சேர்ந்த முரளி, மதுவிற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, அங்கு டாஸ்மாக் உயரதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அந்த ஆய்வில், மதுபான பாட்டில்களின் விலையை விட ரூ.10 கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம், உதவி விற்பனையாளரான முரளி மற்றும் மேற்பார்வையாளர் அருள்குமார் ஆகிய இருவரை கடந்த 2-ம் தேதி தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த அருள்குமார், இன்று பகலில் வீட்டில் தனியாக இருந்த போது, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, திருத்தணி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
» ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்தும் பதிலடியும் முதல் புதிதாக 3 டோல்கேட் வரை: டாப் 10 விரைவுச் செய்திகள்