ஒப்பந்ததாரரிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம்: வட்டார வளர்ச்சி அலுவலர் கைது 

By இ.மணிகண்டன்

விருதுநகர்: நரிக்குடியில் ஒப்பந்ததாரரிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவரை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் இன்று கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே சாலை இலுப்பைக்குளம் சாலையில் இருந்து சொக்காயி அம்மன் கோயில் வரை ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியை சேந்தநதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் அஜித்குமார் ஒப்பந்தம் எடுத்து செய்து முடித்துள்ளார்.

இந்த பணிக்கான தொகையை விடுவிக்க நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் வட்டார வளர்ச்சி அலுவலரான ஜெயபுஷ்பம் (47) ரூ.5 ஆயிரம் கேட்டுள்ளார். அவ்வளவு தொகை தன்னால் கொடுக்க முடியாது என அஜித்குமார் தெரிவித்துள்ளார். அதையடுத்து, ரூ.3 ஆயிரம் கொடுக்குமாறு ஜெயபுஷ்பம் கூறியுள்ளார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அஜித் குமார் இது குறித்து விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். இந்நிலையில், நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் எஸ்பி-யான ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸார் இன்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒப்பந்ததாரர் அஜித் குமாரிடம் இருந்து ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபுஷ்பத்தை கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE