திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி முதல்வரை கண்டித்து மருத்துவர்கள் போராட்டம்

By KU BUREAU

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வரின் நடவடிக்கைகளை கண்டித்து மருத்துவர்கள் நேற்று கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக ஹரிஹரன் உள்ளார். இவர், கல்லூரி முதல்வராக பணியில் சேர்ந்ததில் இருந்து அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகளிடம் இணக்கமாக நடந்து கொள்ளாமல் தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், மருத்துவக் கல்லூரி முதல்வரின் பழிவாங்கும் நடவடிக்கை, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து மருத்துவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள முதல்வரின் அறைக்கு அருகே நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற மருத்துவர்கள், கல்லூரி முதல்வர் ஹரிஹரன் கடந்த 3 தினங்களுக்கு முன்பு துறை தலைவர்களாக இருந்த மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களை துறை தலைவர் பதவியில் இருந்து நீக்கியதை கண்டித்தும், ஓய்வறையில் மருத்துவர்கள் இல்லாதபோது அறையின் பூட்டை உடைத்து சோதனை செய்ததை கண்டித்தும், முதல்வரின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் முழக்கமிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE