பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை: வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம்

By KU BUREAU

நாகர்கோவில்: திருவட்டாறு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பிடிஓ-வாக (பொறுப்பு) இருந்தவர் சைய்யது உசேன். தன்னுடன் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக இவர் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக, அலுவலர்கள் கூறிய புகாரின் பேரில், அவர் மீது விசாரணை நடைபெற்றது. அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க, உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். சைய்யது உசேன் மேல்புறம் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார்.

அங்கும் அவர் மீது பாலியல் புகார் எழுந்தது. அவர் இரவு நேரத்தில் வீட்டுக்கு செல்லாமல், அலுவலகத்தில் தங்கி இருந்தது, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அங்கிருந்து, 10 நாட்களில் ராஜாக்கமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

பாலியல் புகாருக்குள்ளான அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காமல், அவரை பாதுகாக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் செயல்படுவதாக, மாதர் சங்கத்தினர் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக, ஆட்சியரிடம் புகாரும் தெரிவித்தனர்.

இதையடுத்து நடந்த விசாரணையில், சைய்யது உசேன் மீதான புகார் உறுதி செய்யப்பட்டதால், அவரை பணியிடை நீக்கம் செய்து, ஆட்சியர் அழகு மீனா உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தால், போக்ஸோ சட்டத்தில் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE